×

சோழர்காலத்து சோழசிம்மபுரம் மருத்துவ வசதிக்கு தவிக்கும் மக்கள்

108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில் சோளிங்கரில் அமைந்துள்ளது. ஒரே குன்றாலான பெரிய மலையின் மீது கோயிலில் லட்சுமி நரசிம்மர் யோக நிலையிலும், அவருடன் அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். சோளிங்கர் தாலுகாவில் 49 ஊராட்சிகள் உள்ளது. சோளிங்கர் பகுதி மக்களின் வேலைவாய்ப்புக்கு ஆதாரமாக கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டிவிஎஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாராகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 15 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஏராளமான மக்கள் விவசாயம், விசைத்தறி மற்றும் கட்டுமான தொழில்களை நம்பி உள்ளனர்.
சோளிங்கரில் இயங்கி வரும் தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி போதுமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வந்து அதிநவீன வசதியுடன் தரம் உயர்த்த வேண்டும் என்பதும் சோளிங்கர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

சோளிங்கர் நகரை சுற்றிலும் அமைந்துள்ள அப்பங்கார குளம், அம்மன் குளம், நாரைக்குளம், திருக்குளம், பாட்டிக்குளம், பரப்பங்குளம் ஆகிய 6 குளங்கள் பண்டைய காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக சரியான பராமரிப்பின்றி குளங்கள் தூர்ந்து கிடக்கிறது. இதில் பாட்டிக்குளம் இருந்ததற்கான தடயமே இல்லாமல் போனதுதான் வேதனை. நாரைக்குளம், திருக்குளம், அம்மன் குளம் உள்ளிட்ட குளங்களுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்தாலும் குளங்கள் நிரம்புவதில்லை. குளக்கரையில் வீடுகட்டி வசிப்பவர்கள் கழிவு நீரை குளத்தில் விடுவதால் குளங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்த குளங்கள் தற்போது கழிவுநீர் குட்டையாக மாறிப்போனது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. குடிநீர் ஆதாரமாக விளங்கிய குளங்களை தூர் வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதுடன், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள், குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான தக்கான் குளத்தையும் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான சோளிங்கரில் தாலுகா அலுவலகம் அமைப்பது, ஏழை மாணவர்களின் நலனுக்காக அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மக்களை ஓரளவு நிம்மதியடைய செய்துள்ளது.

சுற்றுலா வளர்ச்சிக்காக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப்கார் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் சோளிங்கரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புற வழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் தற்போது பரிசீலனையில் உள்ளது. இவைகளுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. சித்தூர், திருத்தணி, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், ஆற்காடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும் சோளிங்கர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்கிறது. இதேபோல் சோளிங்கரை சுற்றியுள்ள 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் சோளிங்கர் பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்று பரபரப்பாக காணப்படும் சோளிங்கர் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை இல்லாததால் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் இருக்கிறது. அதேபோல் இங்குள்ள பாழடைந்த பழைய காய்கறி மார்க்கெட்டை இடித்துவிட்டு, பார்க்கிங் வசதியுடன் புதிய காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்ட வேண்டும் என்பதும் நிறைவேறாத கனவுதான். நகரின் வளர்ச்சிக்கான மக்களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் நிறைவேறினால் மட்டுமே சோளிங்கர் முழு வளர்ச்சி அடையும் என்பதே உண்மை.

Tags : facility ,Chola ,Cholasimapuram , Sholinghur, medical facility, Cholas
× RELATED ஒட்டக்கூத்தரும் தக்கயாகப் பரணியும்