×

பாளை. சிவன் கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 27 வீடுகள் இடித்து அகற்றம்

நெல்லை: பாளை சிவன் கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 27 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி பல த்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாளை சிவன் கோயில் அருகே அம்பிகாபதி தெரு, எம்பெருமான் தெரு அருகே 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் இக்குடியிருப்புகள் இருப்பதாகவும், இதனை அகற்ற வேண்டுமென கோரி சில அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டன. பாளை சிவன் கோயில் சிவனடியார்கள், உழவார பணிக்குழுவினர், திருச்சிற்றம்பல அறக்கட்டளையினரும் தெப்பத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தெப்பத்திருவிழா நடத்த கடந்த 2009ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கக் கேட்டு மனு அளித்தனர். இருப்பினும் சமீபத்தில் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக அவர்களை காலி செய்ய உத்தரவிட்டதோடு, அதற்கான நோட்டீசையும் அனுப்பினர். கடந்த வாரம் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. கடந்த 11ம் தேதி வீடுகள் இடிக்கப்பட உள்ளதாக பரவிய தகவலின்பேரில் அப்பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அடுப்புக்கூட்டி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்கிட கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் சிவன் கோயில் தெப்பக்குளம் அருகே நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றப்பணி தொடங்கியது. பாளை தாசில்தார் தாஸ் பிரியன் தலைமையில், மண்டல துணை தாசில்தார் மாரிராஜா, வருவாய் ஆய்வாளர் மைதீன், மண்டல உதவி கமிஷனர்கள் பிரேம் ஆனந்த், ஐயப்பன், உதவி செயற்பொறியாளர்கள் பைஜூ, லெனின், இளநிலை பொறியாளர் விவேகானந்தன். செயல்திறன் அதிகாரி ஐவன், மண்டல சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் நடராஜன், உதவி வருவாய் அலுவலர்கள் காசிவிஸ்வநாதன், மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அப்புறப்படுத்தினர்.

தெப்பக்குளம் அருகே 27 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்காக 3 ஜேசிபிக்கள் மற்றும் புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், எதிர் பகுதியில் தங்கள் உடைமைகளோடு தங்க வழியின்றி அமர்ந்தனர். கடந்த 11 ஆண்டுகளாக இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்பிரச்னை நேற்று முடிவுக்கு வந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி பாளை மனக்காவலம்பிள்ளை சாலையில் நேற்று போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. ஒரு வழிப்பாதையாக இருந்த பாளை மார்க்ெகட்- திருச்செந்தூர் சாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் அச்சாலையில் இருபுறமும் சென்றன.

தெப்பத்திருவிழா நடத்த திட்டம்

பாளை சிவன் கோயிலில் தெப்ப திருவிழா, கடந்த 80 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. சிவனடியார்கள் மற்றும் உழவார பணிக்குழுவினர், தெப்ப திருவிழா நடத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் தெப்பத்தை சுற்றிலும் காணப்படும் ஆக்கிரமிப்புகள் காரணமாக குளத்திற்கு தண்ணீர் வருவதிலும், சுவாமி பவனி வருவதிலும் சிக்கல் காணப்பட்டது. மேலும் வீடுகளின் கழிவுநீரும் குளத்திற்குள் விடப்பட்டது.

பாளை சிவனடியார்கள், திருச்சிற்றம்பல அறக்கட்டளையினர் தெப்ப திருவிழா நடத்திட திருவாசகம் படித்ததோடு, மகாமிருத்யுஞ்சய ஜெப மந்திர வேள்வியும் நடத்தினர். இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குளத்தில் தண்ணீர் நிறைத்து வரும் சித்திரை மாதம் தெப்ப திருவிழா நடத்தவும், அதற்கு முன்பாக வெள்ளோட்ட விழா நடத்திடவும் பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Tags : Demolition ,houses ,Shiva Temple Theppakulam , Palai Shiva Temple, Occupancy Removal
× RELATED கோவை முத்தண்ணன் குளக்கரையில் கோயில் இடிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா