×

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம்: ஆன்லைன் மூலம் முன்பதிவு

திருச்சி: புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. 108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. அதில் முக்கியமானது வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு ஆகும். இந்தாண்டு புரட்டாசி மாதம் நாளை (17ம்தேதி) பிறப்பதையொட்டி விரதம் இருந்து பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா பீதி நிலவுவதால் சமூக இடைவெளியை பின்பற்றவும், புரட்டாசி மாதத்தில் வரும் பக்தர்களின் நலம் பேணும் வகையில் தரிசனத்திற்கு காத்திருக்காமல் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் கட்டணமில்லா சேவை மற்றும் கட்டண சேவை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, www.srirangam.org என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வரும் 19ம் தேதி சனிக்கிழமை , அக்டோபர் 3ம் தேதி மற்றும் 10ம் தேதி அன்று காலை 6.30 மணி முதல் 8மணி, 8 மணிமுதல் 10மணிவரை, 10மணிமுதல் 12 மணிவரை, மதியம் 2 மணிமுதல் 4.30 மணிவரை, மாலை 6 மணிமுதல் 8 மணிவரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம். கடைசி சனிக்கிழமையான 26ம் தேதி காலை 6.30 மணி முதல் 8 மணி, 8 மணிமுதல் 10மணிவரை, 10 மணிமுதல் 12மணிவரை, மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை, 2 மணிமுதல் மாலை 4.30 மணிவரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். மாலை 4.30 மணிக்கு மேல் தரிசனம் கிடையாது. இதில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Sami Darshan ,Srirangam Temple , Trichy, Srirangam
× RELATED செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி...