×

தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்காக கொள்ளிடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

திருவையாறு: தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்காக கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தஞ்சையில் அமையவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக திருவையாறு அடுத்த விளாங்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் எடுப்பதற்காக போர்வெல் அமைக்கும் பணி நேற்று காலை துவங்கியது. தகவல் அறிந்த போராட்டக்குழு தலைவர் கலையரசி தலைமையில் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று போர்வெல் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் மேலாளர் எழிலன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருவையாறு தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு போர்வெல் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் கலையரசி கூறியதாவது: எங்கள் பகுதி விவசாயம் சார்ந்த பகுதி. விவசாயம் பாதிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி அமைக்க அரசு முயன்றபோது அதை தடுத்து நிறுத்தியதுடன் உயர் நீதிமன்றத்தில் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில் மீண்டும் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு குடிநீர் எடுக்க முயற்சி செய்கின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கி விடுவதால் குடிநீரும் இல்லாமல் பாதிக்கப்படுவோம். ஆழ்குழாய் கிணறு அமைப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்றார்.

விளாங்குடி விவசாயி தாமோதரன் கூறியதாவது: விளாங்குடி, புனவாசல், அணைக்குடி, செம்மங்குடி உட்பட 20 கிராமங்களில் 400 ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு 10 இடங்களில் அமைத்து வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்கின்றனர். தண்ணீர் எடுத்தால் நிலத்தடி நீர் கீழே சென்றுவிடும். விவசாய பணிகளுக்கு போர்களில் தண்ணீர் வராது. விவசாயம் பாதிக்கும் என்றார்.

Tags : Kolli ,Tanjore Smart City , Tanjore, Smart City
× RELATED பசுமை வீடு கட்டும் இடத்தை ஒன்றிய ஆணையாளர் ஆய்வு