×

குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தக் கோரி நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டம்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியிலிருந்து வரும் மழைநீர், ராஜவாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை, நரசிங்கபுரத்தில் குளங்களுக்கு சென்று குடகனாற்றில் கலக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக குடகனாற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் ரெட்டியார்சத்திரம் பகுதி விவசாயிகள் கடும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மலையிலிருந்து வரும் மழைநீரை, ராஜவாய்க்கால் வழியாக விடாமல், நேரடியாக  குடகனாற்றுக்கு திருப்பி விட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 60 கிராமங்களின் குடிநீர் ஆதாரத்தை பறிப்பதாக கூறியும், பெரியாறு - ராஜவாய்க்கால் உரிமை மீட்பு குழுவினர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து நேற்று, சித்தையன்கோட்டையில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

தொடர்ந்து  ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள், பெரியாறு மீட்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி செம்பட்டி - வத்தலக்குண்டு சாலை சித்தயன்கோட்டை பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் திண்டுக்கல் ஏடிஎஸ்பி இனிகோ, ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி அசோகன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் 70க்கும் மேற்பட்ட போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் வந்த பின்பு தான் கலைந்து செல்வோம் என கூறினர்.

பின்னர்  கோட்டாட்சியர் உஷா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்குமார், தாசில்தார்கள் பவித்ரா, யூஜின், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நீதிபதி, மோகன்ராஜ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். தொடர்ந்து இன்று (செப். 16) ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Hundreds ,opening ,storm , Chinnalapatti, protest
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...