×

இந்திய பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வரைபடம் : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா வெளியேறியது; பாக். செயலுக்கு ரஷியா கண்டனம்!!

மாஸ்கோ: ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழுவில் சீனா, இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான். உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் காணொளி காட்சி மூலமாக பங்கேற்ற கூட்டத்தில் இந்தியா சார்பாக அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதால் கூட்டத்தில் இருந்து அஜித் தோவல் வெளியேறினார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச விதிகளை மீறி பாகிஸ்தான் செயல்பட்டதாக கூறியுள்ளது. பாகிஸ்தானின் செயலை வன்மையாக கண்டிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் செயலை ரஷியாவும் கண்டித்துள்ளது. தவறான வரைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு ரஷியா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. ஆனால் ரஷியாவின் உத்தரவை மீறி பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது ரஷியா அதிருப்தி அடைந்துள்ளது.

இது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “பாகிஸ்தானின் இந்த செயல் ஒரு அப்பட்டமான மீறல். கூட்டத்தை நடத்தும் தலைமையின் ஆலோசனையை அப்பட்டமாக புறக்கணிப்பது மற்றும் கூட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். கூட்டத்தை நடத்தும் தலைமையுடன் கலந்து ஆலோசித்த பின்னர் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தரப்பு கூட்டத்தில் இருந்து வெளியேறியது” எனக் கூறினார்.     


Tags : Pakistan ,territories ,Indian ,India ,Shanghai Cooperation Conference ,Bach ,Russia , Indian Territories, Pakistan, Map, Shanghai, Cooperation, Russia, Condemnation!
× RELATED பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக...