×

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை முடிந்து ஜன. 27ம் தேதி சசிகலா விடுதலை: கர்நாடக சிறைத் துறை தகவல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிவடையும் நிலையில், 10 கோடி அபராதத் தொகையை கட்டினால், சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில சிறைத்துறை தெரிவித்துள்ளது.   தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரை இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச-ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதை பதிவு செய்த போலீசார் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்தனர்.

 இந்த வழக்கு ெசன்னையில் நடந்து வந்தநிலையில் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது, அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் சாட்சிகளை கலைக்க முயற்சி மேற்கொள்வதால், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யகோரி திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கை பெங்களூருவுக்கு கடந்த 2004ம் ஆண்டு மாற்றம் செய்தது. கர்நாடக அரசின் சார்பில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சுமார் பத்து ஆண்டுகள் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த விசாரணை முடிந்து கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி நீதிபதி ஜான்மைக்ேகல் குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததுடன் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஜெயலலிதாவுக்கு 100 கோடியும் மற்ற மூன்று பேருக்கும் தலா 10 கோடியும் அபராதம் விதித்தார்.

அபராதம் ெசலுத்த தவறினால் ேமலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினார். தனிநீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.  அதை விசாரணை நடத்திய நீதிபதி என்.கே.குமாரசாமி கடந்த 2015 மே 11ல் வழங்கிய தீர்ப்பில் தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, நான்கு பேரையும் நிரபராதிகள் என்று விடுதலை செய்தார்.  கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நான்கு பேரை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகள் என தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால், மற்ற மூன்று பேரும் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா குறித்து சில விளக்கங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்கும்படி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி விண்ணப்பித்திருந்தார். அதில், சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் முடிவதற்கு முன் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதா? உச்சநீதிமன்றம் குற்றவாளி என உறுதி செய்தபின் இதுவரை எத்தனை நாட்கள் சிறையில் உள்ளார்? என கேட்டு மனு கொடுத்திருந்தார். இந்த மனுவுக்கு இதுவரை பதில் ெகாடுக்காமல் இருந்ததால், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த 6ம் தேதி மனு கொடுத்தார். இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலா எந்த நாளில் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்படுவார் என்று கேட்டு கடந்த 4.8.2020ம் தேதி ஆர்.டி.ஐ. சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அவரின் கேள்விக்கு சிறை துறை அளித்துள்ள பதிலில், ‘சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, வரும் 2021 ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது. நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகை 10 கோடி செலுத்த தவறினால் ேமலும் ஓராண்டு சிறையில் இருந்து 2022 பிப்ரவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
கர்நாடக சிறைத்துறை அளித்துள்ள தகவலின்படி சசிகலா முன் கூட்டியே விடுதலை செய்யப்பட மாட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு சிறைத்துறை அளித்துள்ள இந்த தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சசிகலாவை மத்திய அரசு முன் கூட்டியே விடுதலை செய்கிறது. அதிமுகவை ஒன்றிணைத்து பாஜக கூட்டணி அமைக்கிறது என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் பரப்பிய தகவல், தற்போது கர்நாடக அரசு அளித்துள்ள தகவலின்படி வதந்தி என நிரூபணம் ஆகியுள்ளது.


Tags : prison ,Sasikala ,Karnataka Prisons Department , Jan. sentenced to 4 years in prison Sasikala released on the 27th: Karnataka Prisons Department information
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்