×

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பெயரில் போலி வங்கி கணக்கு மூலம் 58 கோடி மோசடி: சொப்னா கும்பலின் கைவரிசை அம்பலம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தொடங்கப்பட்ட போலி  வங்கிக்கணக்குகள் மூலம் ெசாப்னா கும்பல் 58 கோடி மோசடி செய்தது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக  தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய சொப்னா கும்பல் மேலும் பல மோசடிகளில்  ஈடுபட்டுள்ளது. இந்த கும்பல் தூதரகத்தின் ெபயரில் போலி வங்கி கணக்குகளை தொடங்கிய  விவரம் ஏற்கனவே மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தெரியவந்துள்ளது.திருவனந்தபுரத்தில்  ஒரே வங்கியில் மட்டும், தூதரகத்தின் பெயரில் 6 கணக்குகள் இருப்பதும்  தெரியவந்துள்ளது. இவை அனைத்துமே போலி கணக்குகள் என்று கண்டுபிடிக்கப்பட்டு  உள்ளது.

இவற்றில் கடந்த 2 ஆண்டுகளில் ₹58 கோடி வெளிநாட்டு கரன்ஸி  வந்துள்ளது. இதில் தற்போது 4 கோடி மட்டுமே அந்த வங்கி கணக்குகளில் மீதம்  உள்ளது. மீதி 54 கோடியும் அதே வங்கியில் உள்ள வேறொரு கணக்கு மூலம் இந்திய  ரூபாயாக மாற்றி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் சில அமைப்புகளுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் பெயரில் வங்கி கணக்கை தொடங்கினால், அது  வெளிநாட்டு பண பரிவர்த்தனை கட்டுப்பாடு சட்டத்தின்கீழ் வராது. அந்த  கணக்கில் எவ்வளவு பணம் வந்தாலும், அது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய  வேண்டியதும் இல்லை. இதை பயன்படுத்தி சொப்னா கும்பல் தூதரக பெயரில் போலி  கணக்குகளை தொடங்கி மோசடி செய்துள்ளனர்.

இதற்காக தூதரக போலி சீல்  மற்றும் ஆவணங்களையும் இந்த கும்பல் பயன்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கைது  செய்யப்பட்ட சரித்குமார் வீட்டில் இருந்து ஏற்கனவே தூதரக போலி சீல்  மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவில்  கடந்த 2018ல் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு  நிதியுதவி கோரி முதல்வர் பினராயி விஜயன் வளைகுடா நாடுகளுக்கு  சென்றிருந்தார். அப்போது முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர், சொப்னா  ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது சொப்னா கேரளாவுக்கு உதவ வேண்டும் என்று கூறி,  அங்குள்ள பல தொண்டு நிறுவனங்களிடம் நிதியுதவி கேட்டு உள்ளார். அந்த  தொகைதான் இந்த வங்கி கணக்குகளில் வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  

அந்த ஆண்டிலேயே 12 லட்சம் அமெரிக்க டாலர் (8.80 கோடி) இந்த வங்கி  கணக்குகளில் வந்துள்ளது. அதுபோல 2019ல் 26 லட்சம் அமெரிக்க டாலர் (19.20  கோடி) வந்துள்ளது. மீதம் உள்ள பணம் இந்த ஆண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

செல்பி எடுத்த பெண் போலீசார்
தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சொப்னாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருச்சூர் மருத்துவமனையில் சொப்னாவுடன் 6 பெண் போலீசார் தங்கள் செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். இந்த விபரம் வைரலாக பரவியது. இதையடுத்து போலீஸ் உயரதிகாரிகள் அந்த 6 போலீசாரையும் எச்சரித்துள்ளனர். மேலும் துறைரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சொப்னா மருத்துவமனையில் இருந்தபோது செப்போனில் பேசவில்லை என நர்சுகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மெடிக்கல் கல்லூரி டீன் நடத்திய விசாரணையில் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சொப்னா மற்றும்  இந்த  வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இன்று  (16ம் தேதி) மற்றும் வரும் 28ம் தேதிகளில் விசாரணைக்கு வருகிறது.

2 எம்எல்ஏ உட்பட 100 பேர் காயம்
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் ஜலீல் மற்றும் ஜெயராஜன் ஆகியோர் பதவி விலக கோரி கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன நேற்றும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் உட்பட கேரளா முழுவதும் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான சபரிநாதன், ஷாபி பரம்பில் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

10க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களும் இதில் காயமடைந்தனர். இதேபோல கண்ணூரிலுள்ள ஜெயராஜனின் வீட்டு முன் பாஜக நடத்திய போராட்டத்திலும் பயங்கர வன்முறை ஏற்பட்டது. நேற்றைய போராட்டத்தில் மட்டும் சுமார் 100 பேர் காயமடைந்தனர்.



Tags : embassy ,US ,Thiruvananthapuram ,gang , 58 crore fraudulent bank account in the name of US embassy in Thiruvananthapuram: Sopna gang's handcuffs exposed
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...