அடுத்த மாதம் மண்டல கால பூஜை சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாதா?: தேவசம்போர்டு விளக்கம்

திருவனந்தபுரம்: ெகாரோனா பரவலை தொடர்ந்து கடந்த  மார்ச் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு  அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல கால  பூஜைகளையொட்டி பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு  வருகிறது. இதன்படி ஆன்-லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே  அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு  நிலக்கலில் கொரோனா பரிசோதனை மையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை  நடந்துள்ளது. கடும் நிபந்தனைகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.  கடந்த மாதம் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில்  நடந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  

ஆனாலும் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பான இறுதி முடிவு,  முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில்  எடுக்கப்படும் என அமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில் சபரிமலை  ஐயப்பன் கோயிலில் இந்த மண்டல காலத்தின்போது தமிழ்நாடு உட்பட வெளிமாநில  பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என செய்தி  வெளியானது. மேலும் சமூக வலை தளங்களிலும் இத்தகவல் பரவியது. ஆனால் இந்த  தகவலை திருவிதாங்கூர் தேவசம்போடு மறுத்துள்ளது. இதுதொடர்பாக  தேவசம்போர்டு தலைவர் வாசு கூறுகையில், ‘‘மண்டல காலத்தையொட்டி சபரிமலை ஐயப்பன்  கோயிலில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில்  வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. அதை யாரும் நம்ப வேண்டாம்’’ என்றார்.

Related Stories:

>