×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏசி பெட்டிகளில் காற்றின் தரம் பராமரிப்பு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:  பொது முடக்கத்திற்கு பிறகு படிப்படியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 7ம் தேதி முதல் 13 ஜோடி பிற மாநில ரயில்களை தெற்கு ரயில்வே தமிழகத்திற்கு இயக்குகிறது.
இந்த ரயில் சேவைகள் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய முக்கியமான முனையங்களை தொட்டு செல்வதால் இந்த ரயில்களுக்கு மக்களின் ஆதரவு பெருகி உள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய தெற்கு ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மற்றும் கோவிட் தொற்று அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். நிலைய நுழைவாயிலில் பயணிகளின் வெப்பநிலை கண்டறிந்து வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே  அனுமதிக்கப் படுகிறார்கள்.

மேலும் ரயில்கள் முழுமையாக சுத்தம் செய்யப்படுகின்றன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தலையணை மற்றும் கை துண்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படுவதில்லை.
அனைத்து ஏ.சி. பெட்டிகளிலும் காற்றை வெளியேற்றி உட்கொள்ளும் கூரையில் பொருத்தப்பட்ட குளிர்சாதன கருவியின்  மூலம் புதிய வெளிகாற்று உட்கொள்ளும் வீதத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஒரு பயணிக்கு நிமிடத்திற்கு 0.25 கன மீட்டர் காற்று இருந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் 6-8 முறை பெட்டியில் உள்ள காற்று மாற்றப்படும்.  ஆனால், இப்போது மணிக்கு குறைந்தது 12 முறை காற்றை மாற்றுவதால் ஏசி பெட்டியில் ஒரு பயணிக்கு நிமிடத்திற்கு 0.35 கன மீட்டர் காற்று வர வழி வகுக்கிறது. ஏசி பெட்டிகளின் உள்காற்றின் தரம் சுத்திகரிப்பு மூலம் உறுதி செய்யப்படுகிறது.

வடிப்பான்களை வழக்கமாக சுத்தம் செய்வதன் மூலமும், சுத்திகரிப்பதன் மூலமும் காற்றின் தரம் பராமரிக்கப்படுகிறது.  ஒவ்வொரு பயணத்திற்கும் பிறகு பராமரிப்பின் போது இவை சுத்தம் செய்யப்படுகின்றன. பீரியோடிக் ஓவர் ஹாலிங்கின் போது, அனைத்து ஏசி குழாய்களும் ரோபோடிக் நடைமுறையை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Corona Prevention , Air quality maintenance in AC boxes as a corona prevention measure: Southern Railway Information
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்...