×

கொரோனா குறித்து மார்ச் மாதமே எதிர்கட்சி எச்சரித்தது - துரைமுருகன் : அரசு எடுத்த நடவடிக்கையால் நோய் பரவல் குறைந்து வருகிறது- முதல்வர்

சென்னை: கொரோனா ஆபத்து குறித்து மார்ச் மாதமே எதிர்கட்சி எச்சரித்தது என்று துரைமுருகனும், அரசு எடுத்த நடவடிக்கையால் நோய் பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது என்று முதல்வரும் பேசினர்.  தமிழக சட்டப் பேரவையில் நேற்று கொரோனா தொற்று தொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார். தடுப்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு நீங்கள் எப்படி நன்றி சொல்கிறீர்களோ, அதேபோன்று திமுகவும் நன்றியை ெதரிவித்துக் கொள்கிறது. ஆனால் நான் கடந்த மார்ச் மாதமே சொன்னேன். ஒரு சாவு கூட கொரோனாவால் வராது. அந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம் என்றீர்களே. இப்போது எத்தனை சாவு வந்து விட்டது பார்த்தீர்களா.

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:  அனைத்து முன்னெச்சரிக்கையையும் எடுத்த காரணத்தால் நோய்ப் பரவல் தமிழ்நாட்டில் குறையத் தொடங்கியிருக்கிறது. இறப்பு சதவீதம் குறைந்திருக்கிறது. குணடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுதான் நடைமுறை. ஒரு உயிரைக்கூட இழக்கக்கூடாது என்பது அரசினுடைய நிலைபாடு. அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால்,  இதற்கு முழுமையான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனைகளின் படி, அரசு எடுத்த நடவடிக்கைகளால் இன்று தமிழகத்தில் நோய்ப் பரவல் குறைந்திருக்கிறது.  ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், எனக்குக் கூட நோய்கள் இருக்கின்றது, என்னுடைய மருத்துவர், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுரை அளித்துள்ளார். இருந்தாலும், நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினாலே பணி செய்ய வேண்டுமென்பதால், ஒரு மணி நேரம் தான் வெளியே செல்கின்றேன்.

 அப்பொழுதுகூட, பாதுகாப்பாக இருக்கிறேன் என்று தெளிவுபட கூறியிருக்கிறார். அப்படியிருந்தும் கூட, இந்த நோய் தொற்றால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்று சொன்னால், இந்த நோயினுடைய வீரியம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அறிய வேண்டும். அதிமுக அரசைப் பொறுத்தவரை, இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு எந்த அளவிற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.   எல்லா தொலைக்காட்சிகளிலும் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டு வருகிறோம். நடிகர்களை வைத்து மக்களுக்கு எளிதாக புரியக்கூடிய வகையில், இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, இந்த நோய்ப் பரவலை எவ்வாறு தடுக்க முடியும் என்ற விவரங்களை அன்றாடம் ஊடகத்தின் மூலமாக தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம்.

மேகதாது அணை விவகாரம்
எதிர்கட்சிகளுடன் பேசி முதல்வர் தலைமையில் குழுவாக பிரதமரை சந்திக்க வேண்டும் தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:  கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மேகதாது அணையை கட்டுவதற்காக முதல்வர் தலைமையில் ஒரு குழு பிரதமரை சந்திக்க போகிறோம். தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருக்கிறார். அப்படி அவர்கள் போய் பார்த்தால் இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன நிலை எடுக்கப் போகிறது?.  
 
 எதிர்கட்சிகளுடன் கலந்துபேசி, முதல்வர் தலைமையில் ஒரு குழுவாக பிரதமரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தலாம். இல்லாவிட்டால் கர்நாடக அரசுடனும் பேச வேண்டும். அப்படி வலியுறுத்தினால்தான் இந்த பிரச்னை நிற்கும். ஏனென்றால் மத்தியிலும், கர்நாடகத்திலும் பாஜ ஆட்சி. எனவே, தமிழக அரசு சிந்தித்து உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும்.   முதல்வர் எடப்படி பழனிசாமி: இதில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுகுறித்து 3, 4 முறை மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கொண்டு வந்தார்கள். நாம் கடுமையான ஆட்சேபனை செய்த நிலையில், அதில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகவே, அவர்கள் எந்த வகையிலும் மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.   இவ்வாறு விவாதம் நடைபெற்றது.



Tags : Opposition ,Duraimurugan , Opposition warns of corona in March - Duraimurugan
× RELATED ராமரை அவமதித்துவிட்டதாக...