×

பட்டாபிராமில் குண்டும் குழியுமான சாலையால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பட்டாபிராம்: ஆவடி மாநகராட்சி 39வது வார்டு பட்டாபிராம், கோபாலபுரம் பிரதான சாலையில் பட்டாபிராம், இந்து கல்லூரி ரயில் நிலையம், சேக்காடு துணை மின் நிலையம், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி சென்று வருகின்றனர். இச்சாலை, கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “பட்டாபிராம் பகுதியில் உள்ள கோபாலபுரம் பிரதான சாலையை பயன்படுத்தி சேக்காடு, கோபாலபுரம், தண்டுரை, அன்னம்பேடு சோரஞ்சேரி, கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இச்சாலை வழியாக பட்டாபிராம், இந்து கல்லூரி ரயில் நிலையங்களை பயன்படுத்தி தங்களது பணிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் சென்று வருகின்றனர். மேலும், இச்சாலையில் உள்ள சேக்காடு துணை மின் நிலையத்திற்கு புகாரளித்தல், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் செல்கின்றனர்.
இச்சாலை கடந்த சில ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த கிடக்கிறது.  குறிப்பாக, பல இடங்களில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்த பள்ளங்களில் தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆழம் தெரியாமல் பள்ளங்களில் சிக்கி விழுந்து காயமடைகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் பட்டாபிராம் பகுதியில் உள்ள கோபாலபுரம் பிரதான சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : Accident ,road ,Motorists , Accident due to bumpy road in Pattabhim: Motorists suffer severely
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி