×

கூடுதல் கமிஷனர் பெயரில் போலி பேஸ்புக் தொடங்கி மோசடி: மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு; 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் பாதிப்பு

சென்னை: தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தினகரன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பல லட்சம் பணம் மோசடி செய்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் மாநகர கூடுதல் கமிஷனர் தினகரன் அலுவலக எழுத்தர் மார்ட்டின் விக்டர் சாம் நேற்று முன்தினம் இரவு அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘மாநகர தெற்கு கூடுதல் கமிஷனர் சட்டம் ஒழுங்கு அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறேன். கூடுதல் கமிஷனர் தினகரன் ஐபிஎஸ் முகநூல்(பேஸ்புக்) கணக்கை அடையாளம் தெரியாத நபர் போலியாக தொடங்கி மற்றவர்களுக்கு உதவ பணம் கேட்டு மோசடி செய்துள்ளார்.

எனவே, மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’. என்று புகார் அளித்திருந்தார். அதன்படி வேப்பேரி குற்றப்பிரிவு மற்றும் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் மோசடி நபரை தேடி வருகின்றனர். கொரோனா காலத்தில் நிதி திரட்டுவதாக சைபர் குற்றவாளிகள் வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக கூடுதல் டிஜிபி ரவி, மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள், மாதரவம், பூக்கடை உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 20க்கும் மேற்பட்டோர் இதுவரை புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு குற்றவாளிகளையும் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்ய வில்லை. சைபர் குற்றவாளிகள் போலி பெயர் மற்றும் போலி இ-மெயில் முகவரி மூலம் ராஜஸ்தான், ஒடிசா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் சைபர் குற்றவாளிகளை கைது செய்ய டிஜிபி திரிபாதி உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாக உயர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கும் காவல் துறை சார்பில் கடிதம் எழுதியுள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : organization ,commissioner ,individuals ,IPS officers , Fake Facebook launching scam in the name of additional commissioner: personal organization to catch mysterious individuals; 20 people were injured, including 7 IPS officers
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...