கொரோனா சோதனையில் குளறுபடி 4 மாதத்தில் 1.62 லட்சம் சோதனைகளை அதிகரித்து காட்டிய தமிழக அரசு: பரபரப்பு தகவல் அம்பலம்

சென்னை: 4 மாதத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 1.62 லட்சம் பரி சோதனைகளை தமிழக அரசு அதிகரித்து காட்டியுள்ள தகவல் அம்பலம் ஆகியுள்ளது. இதனால் கொரோனா சோதனையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சோதனை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதன்படி தமிழகத்தில் அதிக கொரோனோ பரிசோதனை செய்வதாக அரசு கூறிவருகிறது. தமிழகத்தில் செப். 14ம் தேதி வரை 59 லட்சத்து 68 ஆயிரத்து 209 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

ஆனால் கொரோனா பரிசோதனையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று மருத்துவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி கூறிவருகின்றனர். இந்நிலையில் இதை உறுதிபடுத்தும் வகையில், கொரோனா சோதனையில் குளறுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன்படி ஜூன் மாதம் வரை அதாவது 4 மாதத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1.62 லட்சம் சோதனைகளை தமிழக அரசு அதிகரித்து காட்டியுள்ள அதிர்ச்சி தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜுன் மாதம் வரை செய்யப்பட்ட கொரோனா சோதனை தொடர்பான தகவல்களை அளித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை நேற்று எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளது.

இதில் தமிழகத்தில் மார்ச் மாதம் 1875 சோதனைகளும், ஏப்ரல் மாதம் 85 ஆயிரத்து 848 சோதனைகளும், மே மாதம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 201 சோதனைகளும், ஜூன் மாதம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 559 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 482 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 11 லட்சம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆதாவது கடந்த ஜூன் 30ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட கொரோனா தொடர்பான அறிக்கையில் ஜூன் 30ம் தேதி வரை 11 லட்சத்து 70 ஆயிரத்து 683 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய அரசு அளித்துள்ள பதிலின் எண்ணிக்கைக்கும், தமிழக அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கைக்கும் இடையில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 201 சோதனைகள் வித்தியாசம் உள்ளது அம்பலம் ஆகியுள்ளது. இதனபடி பார்த்தால் கொரோனா சோதனை எண்ணிக்கையில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: கொரோனா சோதனை எண்ணிக்கை வெளியிடுவதில் தமிழக அரசு வெளிப்படைத் தண்மையுடன் செயல்பட வேண்டும். தினசரி மாவட்டம் வாரியாக பரிசோதனை வெளியிட வேண்டும்.

தினசரி அரசு மற்றும் தனியார் பரிசோதனை மையங்களில் செய்யப்படும் சோதனைகள் எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட வேண்டும். தனியார் மையங்களில் வெளியிடும் சோதனைகளையும் சேர்த்துத்தான் தமிழக அரசு ஒரு நாளில் இவ்வளவு சோதனைகள் நடத்துகிறோம் என்கின்றனர். இதனால் அரசையும், தனியாரையும் தனித்தனியாக பிரித்து சோதனை விவரங்களை வெளியிட வேண்டும். இந்த சோதனை விவகாரத்தில் பெரிய மர்மங்கள் அடங்கியுள்ளன. விரைவில் அது வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

* ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 90 பரிசோதனை மையங்கள் செயல்பட்டுவந்துள்ளது.

* இதில் 47 அரசு மையங்கள், 43 தனியார் மையங்கள் ஆகும்.

* ஜூன் மாதம் 30ம் தேதி வரை 11,70,683 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: