×

நீட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் திமுக - அதிமுக கடும் மோதல்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த விவாதத்தின்போது திமுக- அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதே நேரத்தில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக காங்கிரசை தொடர்புபடுத்தி அதிமுக கூறிய குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து பேசியதாவது:
அரியலூர் அனிதா முதல், திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ, மாணவிகள் `நீட்’ தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம். இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக - மாணவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் விலக்கு கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை.

செப்டம்பர் 12ம் தேதி, அதாவது நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மதுரை ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆகவே தமிழக சட்டமன்றத்தையும், தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத, நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக அரசு கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும் கண்டன தீர்மானம் நாம் கொண்டு வர வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

ராதாபுரம் இன்பதுரை (அதிமுக): நீட் தேர்வு அறிவிப்பை மத்திய காங்கிரஸ் அரசு 21.10.2010ல் வெளியிட்டது. அப்போது, காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வை திமுக என்றைக்கும் ஏற்றுக்கொள்ளவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி: 2010ம் ஆண்டுதான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது காங்கிரஸ் அரசில் திமுக இடம்பெற்றிருந்தது. அதைத்தான் உறுப்பினர் சுட்டிக் காட்டுகிறார். இன்பதுரை: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு மறுசீராய்வு மனுவை காங்கிரஸ் அரசுதான் தாக்கல் செய்தது. இதனால் தான் நீட் தேர்வு வருவதற்கு காரணமாகிவிட்டது. நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் சென்று வாதாடியது, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். இதை யாராலும் மறுக்க முடியுமா?

(இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் பிரின்ஸ், விஜயதரணி, ராஜேஸ்குமார் உள்ளிட்ட 7 காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்பதுரை பேசிய குறிப்பிட்ட பகுதியை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.) சபாநாயகர் தனபால்: உங்களுக்கு (காங்கிரஸ்) வாய்ப்பு தருகிறேன். அப்போது நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

முதல்வர்: நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் ஆஜரானாரா? இல்லையா? இது உண்மை என்றால் அவை குறிப்பில் இருக்கட்டும். இல்லை என்றால் நீக்குங்கள். (அதன்பிறகும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுமார் 5 நிமிடம் இருக்கைக்கு செல்ல மறுத்து அங்கேயே நின்று கொண்டிருந்தனர். சபாநாயகர் எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே நின்றனர்.)
சபாநாயகர்: அவையின் மைய பகுதிக்கு வந்து வற்புறுத்துவது சரியில்லை. இதுபோன்று செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரின்ஸ் (காங்கிரஸ்): என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். எங்களுக்கு நீதி வேண்டும். அவையில் இல்லாத ஒருவரை பற்றி பேச கூடாது.

(சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்ல மறுத்தனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். உடனே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவைக் காவலர்கள் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்)
மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிடாமல் செய்தது திமுக தான். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது திமுக தான். 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வை மத்திய பாஜ அரசு திணித்தபோது அதை வேடிக்கை பார்த்தது அதிமுக தான்.

முகமது அபுபக்கர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, நீட் தேர்வை அனைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி: யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது? நீட் தேர்வு எப்போது வந்தது? நீட் தேர்வை யார் அறிமுகப்படுத்தினார்கள்? என்று இந்த நாட்டிற்கே தெரியும். 2010ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வாதாடி தீர்ப்பை பெற்றார். அப்பொழுது அந்த தீர்ப்பை எதிர்த்து யார் வாதாடினார்கள்? இவ்வளவு பேருக்கு பிரச்னை வந்ததற்கு யார் காரணம்? நாங்கள் அல்ல. 2010ல் நீட் தேர்வை கொண்டுவந்தது தான் 13 பேர் மரணத்திற்கு காரணம்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: 27.12.2010 வரலாற்றில் ஒரு கருப்பு நாள். இந்திய மருத்துவ குழுமம் நீட் குறித்த நோட்டீஸ் வெளியிட்டது. 8 மாதத்தில் நீட் தேர்வு கிடையாது என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார். அது எப்படி? அதற்கான வழிவகையை சொல்லுங்கள்.

மு.க.ஸ்டாலின்: நீட் விவகாரத்தில் கட்சி பாகுபாடின்றி போராட அனைவரும் தயார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை வந்தபோது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பேசினார். சட்ட முன்வடிவை உருவாக்கி, அதை தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றினார். அதுபோலத்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: ஜல்லிக்கட்டு தமிழகத்திற்கு மட்டுமான நிகழ்வு. அது ஒரு மாநிலத்தை சார்ந்த பிரச்னை. நீட் அப்படி அல்ல. தேசிய அளவிலான பிரச்னை. எத்தனையோ மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகம் மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

* நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிடாமல் செய்தது திமுக தான்.
* நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது திமுக தான்.
* 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது.
* நீட் தேர்வை மத்திய பாஜ அரசு திணித்தபோது அதை வேடிக்கை பார்த்தது அதிமுக தான்.

Tags : DMK ,clash ,AIADMK ,Congress MLAs , DMK-AIADMK clash: Congress MLAs expelled from cage
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...