×

வத்தலக்குண்டுவில் பரபரப்பு: தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே, கிறிஸ்தவ தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோயில்பட்டி கிராமத்தில் புனித சவேரியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆலயத்தின் வெளிச்சுவரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். வெடிச்சத்தம் கேட்டு பிரார்த்தனையில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். சுவரில் பெட்ரோல் குண்டு வீசிய இடத்தில் கருப்பு படிந்துள்ளது.

மேலும், அருகே உடைந்த பாட்டில் கிடந்தது. இது குறித்த தகவலின்பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பவுலோஸ், நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவாலயத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு (100) நேற்று மர்மநபர் ஒருவர் போன் செய்து, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடனே திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் 20க்கும் மேற்பட்டோர், அபிராமி அம்மன் கோயிலுக்கு சென்று மோப்ப நாய் மேக்ஸ், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். கோயில் வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதன் பின்னரே இது வெறும் வதந்தி என தெரிந்தது. அழைப்பு விடுத்த நம்பரை போலீசார் திரும்ப தொடர்பு கொண்டபோது, அதில் மது போதையில் ஒருவர் உளறியது தெரிந்தது.

போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர். வெடிகுண்டு சோதனையால் கோயிலில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த வாரமும் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ஆனால் எந்த குண்டும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதுடன், வெடிகுண்டு புரளி கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : church , Vattalakundu riots: Petrol bomb blast on church
× RELATED கிறிஸ்தவ சபை ஊழியர்களை மிரட்டிய பாஜக...