×

தேர்வு நடத்துவதற்கான செலவினம் பற்றிய அண்ணா பல்கலை., அறிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி!!

சென்னை:  தேர்வு நடதத்துவதற்கான செலவினங்கள் குறித்து அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வினை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட பணிகளுக்காக செலுத்த வேண்டிய தேர்வு கட்டணங்களை ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் அனைவரும் செலுத்தவேண்டுமென்று பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஹரிகரன், சௌந்தர்யா உள்ளிட்டோர் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தாலும், இல்லையென்றாலும் அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமில்லாது, தேர்விற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என்பதையும் அண்ணா பல்கலைகழகம் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகம் ஒரு விரிவான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வு நடத்துவதற்கான கட்டணம் ரூ,118 கோடி ரூபாய்க்கு வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும், ஆனால் அண்ணா பல்கலைகழகம் செலவிட்டது ரூ.141 கோடி என தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் தங்களுக்கு பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், கல்லூரிகளில் வசூலிக்கப்பட்ட தேர்வு கட்டணமானது தங்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை எனவும் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, கட்டணம் செலுத்தாத கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து, அண்ணா பல்கலைகழகம் வருகிற 24ம் தேதிக்குள் இதுதொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags : Anna University ,ICourt , For conducting the examination, Expenditure, Anna University., Report, iCourt Dissatisfaction
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது..?