×

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரழிக்கிறது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், அதில் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் கோலி, மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வழக்கறிஞர் சூரியப்பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதே போன்று ஆன்லைன் விளையாட்டான ரம்மியை தடை செய்ய கோரியும் வழக்கறிஞர் வினோத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளுக்கு மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தகவல் தொழிநுட்ப சட்ட விதிகளின் படி தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் எனவும், எனவே இவ்வாறு நேரடியாக தடை விதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் சீரழிக்கிறது. பெற்றோர்கள் உறங்க சென்ற பிறகு ஆன்லைன் விளையாட தொடங்கும் பிள்ளைகள் அதிகாலை வரை விளையாடுவதாகவும், இந்த விளையாட்டுக்கு குழந்தைகள் அடிமையாவதாகவும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர் சூரியப்பிரகாஷம் வாதத்தை முன்வைக்கும் போது; தமிழக அரசே இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த விளையாட்டை விளம்பரம் செய்த நடிகர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் இந்த ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேருங்கள் என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை செப். 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Chennai High Court , Online games are ruining not only the youth but also the children: Chennai High Court opinion
× RELATED மாணவர்களின் கல்வியில் விபரீத...