×

நாகையில் எளிமையாக நடந்து முடிந்த தங்க மீன் திருவிழா..!!: கொரோனா ஊரடங்கால் கோவில் வளாகத்திலேயே நடந்ததால் மக்கள் ஏமாற்றம்!!!

நாகை:  நாகப்பட்டினத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தங்க மீன் திருவிழா இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கோயிலுக்குள்ளேயே எளிமையாகவும், அதேவேளையில் விமர்சையாகவும் நடந்து முடிந்துள்ளது. விழாவின் வரலாறு: நாகையில் நீலாயதாட்சியம்மன் சுவாமி கோயிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. நாகையில் பிறந்த சிவ பக்தரான அதிபத்த நாயனார் மீன்பிடி தொழில் செய்து வந்தார். தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சில நேரங்களில் கடலில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்துவிட்டு வீட்டுக்கு வெறுங்கையுடன் செல்வார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இவரின் பக்தியை பரிசோதிக்க சிவபெருமான் முடிவு செய்தார். அதன்படி, கடலில் மீனுக்காக அதிபத்த நாயனார் வீசிய வலையில் தங்க மீன் ஒன்றை சிக்கச் செய்தார். வலையில் வேறு எந்த மீனும் இல்லாத நிலையில், அதிபத்தர் தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்காக கடலில் விட்டுவிட்டு சென்றார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார். இதை நினைவுகூரும் வகையில், நாகை புதிய கடற்கரையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யநட்சத்திர நாளில், தங்க மீனை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அலங்கரிக்கப்பட்ட தேரில், சிவபெருமான் முக்கிய வீதிகளில் வலம் வந்து கடற்கரையை அடைவார். இதையடுத்து நம்பியார் நகர் மீனவ கிராம மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீனை சீர் வரிசையுடன் மேளதாளம் முழங்க கடற்கரைக்கு கொண்டு செல்வர். இவ்விரண்டும் சங்கமிக்கும்போது, விழா களைகட்டும். மீனவர்கள் கொண்டு வரும் சீர் வரிசையுடன் தங்க மீனும், வெள்ளி மீனும் நடுகடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, வீசி எறியப்படும். அதனைத்தொடர்ந்து, தங்க மீனையும், வெள்ளி மீனையும் எடுக்க போட்டி களைகட்டும். இந்நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால், இந்தாண்டு அவ்வாறு களைகட்டாமல் கோவில் வளாகத்திலேயே மிக எளிமையாகவும், அதே வேளையில் விமர்சையாகவும் விழா நடந்து முடிந்துள்ளது. இதனால் மீனவ மக்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Goldfish Festival , Dragon, Simply, Goldfish Festival, Corona, People Disappointed !!!
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...