×

சீனாவுடனான லடாக் எல்லைப் பிரச்னை இன்னும் தீரவில்லை: பிரச்சனைக்கு தீர்வு காண பொறுமை அவசியம்... நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாகப் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் பதிலடியில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இருப்பினும் 40 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. மறுபுறம் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு தரப்பிலும், பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்து, சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது என சீனாவிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

அதைதொடர்ந்து, இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே மாஸ்கோவில் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை நிறைவேற்றுவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக எல்லையில் கடந்த ஒரு வாரமாக சீன ராணுவம் எந்தவித அத்துமீறல்களிலும் ஈடுபடாமல் உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சீனா உடனான மோதல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

இந்நிலையில் லடாக் எல்லையில் தற்போதைய நிலை குறித்துமக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சனை இன்னும் தீரவில்லை. எல்லை வரையறையை சீனா ஒப்புக்கொள்ள மறுப்பதால் சுமூகமான தீர்வு இல்லை. லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக இந்திய சீன உறவில் தாக்கல் ஏற்படும். எல்லை பிரச்சனையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறையை சீனா ஏற்காமல் செயல்படுகிறது. சீனா தன்னிச்சையாக செயல்பட கூடாது என தூதரக ரீதியாக இந்தியா தெரிவித்துள்ளது.

பிரச்சனை நீடித்தாலும் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன. எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண பொறுமை அவசியம். எல்லைக்கோடு ஜனநாயகப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை என சீனா கருதுகிறது. சீனா உடனான எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது. எல்லைப்பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் சீனப்படைகள் தங்களது துருப்புகளை அதிகரித்து வருகின்றனர். எல்லையில் உள்ள நமது வீரர்கள் கடுமையான சோதனைகளை தாண்டி நாட்டை பாதுகாக்கின்றனர். எல்லை பிரச்சனையில் எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

லடாக்கில் சீனா 38,000 ச.கிமீ பரப்பு நிலப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் 5,180 ச.கிமீ பரப்பு நிலப் பகுதியை ஆக்கிரமித்து சீனாவிடம் கொடுத்துள்ளது. சீன ராணுவம் லடாக் பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க இந்திய ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். ராணுவ வீரர்கள் தன்னுயிரை நீத்து சீனாவுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். லடாக் எல்லையில் சீனாவின் முயற்சிகளை நமது வீரர்கள் முறியடித்தனர். பிரச்சனைக்கு இறுதி தீர்வு காணப்படும் வரை எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து நடக்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நிற்போம். ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாம் நிற்போம் என மக்களவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Ladakh ,China ,Rajnath Singh ,Parliament , Ladakh border issue with China still unresolved: Patience is needed to resolve the issue ... Rajnath Singh speaks in Parliament
× RELATED லடாக் எல்லைப் பிரச்னையில் எங்கள்...