×

ஊருக்கு தான் உபதேசம்: உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் குவியும் குப்பைகள்

உடுமலை,: உடுமலை நகராட்சி 7.41 சதுர கி.மீ. பரப்பளவும் 33 வார்டுகளும் கொண்டது. இங்கு 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது.

இந்நிலையில் உடுமலை நகராட்சியை குப்பையில்லாத நகராட்சியாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, நகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து குப்பைத்தொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் குப்பைத் தொட்டிகளில்லாத நகராட்சியை மட்டுமே உருவாக்க முடிந்தது.ஆனால் பல வீதிகளில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இவ்வாறு வீதிகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் அலட்சியப்போக்கு தொடர்கிறது. அதேநேரத்தில் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நகராட்சி அலுவலக வளாகத்திலேயே குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

உடுமலை நகராட்சி முன்பு செயல்பட்டு வந்த தாகூர் மாளிகையில் பழைய உடைந்த டேபிள்,மேஜைகள் மற்றும் கோப்புகள் என ஏராளமானவை அறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அந்த கட்டிடத்தின் முன்புறம் திறந்த வெளியில் தகடுகள், இரும்பு குழாய்கள்  உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இத்தகைய கழிவுகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்கும் நிலை ஏற்படும். அத்துடன் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்தவும், மறுபடியும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : town ,office premises ,Udumalai , Udumalai Municipality, Garbage
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி