×

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் திரியும் யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மேட்டுப்பாளையம்: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் கல்லார் மற்றும் நெல்லித்துறை வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு காலில் காயத்துடன் 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று நடக்க முடியாமல் சுற்றித்திரிவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேசுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம் ரேஞ்சர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் காலில் காயத்துடன் நடமாடிய யானையை கண்காணித்தனர். அவ்வப்போது யானைக்கு பிடித்த உணவுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் யானைக்கு அடிபட்ட காலில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. எனவே யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிக்கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.    உயரதிகாரிகள் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அனுமதி அளித்தனர்.

கோவை மாவட்ட வனத்துறை யானையை பிடித்து சிகிச்சை அளிக்க கோவை மாவட்ட உதவி வன பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவ அதிகாரி சுகுமார், ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் மனோகரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களுக்கும், வனத்துறையினருக்கும் பாதுகாப்பு அளிக்க சுயம்பு மற்றும் வெங்கடேஷ் என்ற இரண்டு கும்கி யானைகள் கோவை சாடிவயல் முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டன. தற்போது யானை நெல்லித்துறை காப்புக்காடு உள் வனத்திற்குள் சென்றுள்ளதால், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் முன்னேற்பாடாக யானைக்கு சிகிச்சை அளிக்க மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களுக்கு காயமடைந்த யானை வரும்போது மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிக்கலாம் என மருத்துவ குழு முடிவு செய்துள்ளது. கோவை சாடிவயல் இருந்து கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகள் நெல்லை மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தோப்பில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அடிபட்ட யானை மருத்துவ குழு உத்தேசித்துள்ள இடத்திற்கு வந்த பிறகு இந்த யானைகளை தோப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும் தீர்மானித்துள்ளனர்.

Tags : Mettupalayam ,forest , Mettupalayam, elephant, forest
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது