×

மாவட்டத்தில் 2 சுற்றுக்களாக 1.64 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

ஊட்டி: தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 1.64 லட்சம் குழந்தைகளுக்கு 2 சுற்றுகளாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் துவக்கப்பட்டுள்ளது. தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு அல்பென்ட்சோல் எனப்படும் கிருமி நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி டேவிஸ்டேல் அங்கன்வாடி மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து, குழந்தைகளுக்கு கிருமி நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் குடற்புழு நீக்க வாரம் முதல்சுற்று செப்டம்பர் 14 முதல் 19 வரையிலும், இரண்டாவது சுற்று 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் அல்பென்ட்சோல் கிருமி நீக்க மாத்திரை வழங்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாக இரண்டு சுற்றுகளாக 429 அங்கன்வாடி பணியாளர்கள், 179 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 383 ஆஷா பணியாளர்கள் மூலம் நேரடியாக வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 223 குழந்தைகள் பயன்பெறுவார்கள். அல்பென்ட்சோல் மாத்திரை உட்கொள்வதால் குடற்புழுநீக்கம் செய்யப்படுவதுடன், குழந்தைகளின் ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது.

தாய்மார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு இம்மாத்திரையை வழங்கிட வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துைண இயக்குநர் பாலுச்சாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : children ,district , Wormwood, tablets
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...