×

ஏர்வாடி அருகே புதர்மண்டிய கால்வாயால் குளம் நிரம்புவதில் சிக்கல்: விவசாயிகள் கவலை

ஏர்வாடி: ஏர்வாடி இனாம் ஆலங்குளம் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் புதர்மண்டி கிடப்பதால் குளம் நிரம்புவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர்வாடி அருகே இனாம் ஆலங்குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த குளத்திற்கு சூரங்குடி நாங்குநேரியான் கால்வாயில் இருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 2 கிமீ தூரமுள்ள இந்த கால்வாய் களக்காடு யூனியன் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்த கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் கால்வாய் தூர்ந்து போய் காட்சி அளிக்கிறது. கால்வாயில் பல இடங்களில் மண் திட்டுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. கால்வாயே தெரியாதவாறு அமலைச்செடிகள் ஆக்ரமித்துள்ளன. இதையடுத்து கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு உள்ளது. குளத்திற்கு தண்ணீர் திறந்து விட்டாலும், கால்வாயில் தண்ணீர் வராத நிலை காணப்படுகிறது.

மழை காலங்களில் கால்வாயில் நீரோட்டம் தடைபடுவதால் குளம் நிரம்புவதில்லை என்றும் பயிர்களுக்கு பாய்ச்ச போதியளவு தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே புதர்மண்டி கிடக்கும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் பலமுறை களக்காடு யூனியன் நிர்வாகத்திடம் மனுக்கள் மூலம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலம் நெருங்குவதால் கால்வாயை தூர்வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. பொறுப்பாளர் முருகன் ஆகியோர் கூறுகையில், 300 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும் கால்வாய்களை பொதுப்பணித்துறையினர் பராமரிக்கலாம் என்று விதி உள்ளது. அதன்படி புதர்மண்டி கிடக்கும் இனாம் ஆலங்குளம் கால்வாயையும் களக்காடு யூனியனிடம் இருந்து பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் கால்வாயை தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : pond ,canal ,Ervadi , Ervadi, farmers, concern
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்