×

தஞ்சை அரசு மருத்துவமனை அவலம்: கொரோனா டெஸ்ட் குளறுபடியால் உயிர் பலிகள் மறைப்பு

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை குளறுபடியால் உயிர் பலிகளும் மறைக்கப்படுகிறது. தொற்று அதிகரிப்பால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தஞ்சை மட்டுமின்றி நாகை, திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தஞ்சையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 8,340பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 128 பேர் பலியாகி உள்ளனர். 877 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனை மற்றும் வளாகம் சுகாதாரமின்றி உள்ளது. மருத்துவமனைக்கு வருவோருக்கு கொரோனா சோதனை நடத்தப்படும். விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா நோயாளிகள் விரும்பினால் ஓரிரு நாளிலே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் கொரோனா நோயாளி வீட்டுக்கு செல்ல விரும்பினால் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த வசதி உள்ளதா என அவரது வீட்டை மருத்துவக்குழு ஆய்வு செய்த பின்னர் தான் நோயாளிகளை அனுப்புவர். இப்போது அப்படி இல்லை. விரும்பினால் உடனே அனுப்பி விடுகின்றனர். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள் தங்கியுள்ள 300 படுக்கை வார்டு நுழைவு பகுதியில் கைகழுவும் இடத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

இதேபோல் வளாகத்தில் கழிவுநீர் நிரம்பி வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 300 படுக்கை கட்டிடம் சேதமடைந்து அபாயகரத்தில் உள்ளது. முதல் மற்றும் 2வது வார்டுகளில் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கழிவறையை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள், நோயாளிகள் பயன்படுத்தப்படும் சிரஞ்சி, காயங்களுக்கு கட்டுகட்ட பயன்படுத்திய துணிகள் அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் மறைக்கப்படுகிறது. கொரோனா சோதனையும் தற்போது குறைந்து வருவதாக நோயாளிகள் குமுறுகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை, உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரம் உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை. கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா நிதியை முறையாக பயன்படுத்த வேண்டுமென நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுபற்றி திமுக எம்எல்ஏ துரைசந்திரசேகரன் கூறியதாவது: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறை வசதி சரியாக இல்லை. கொரோனா நோயாளிகள் குணமாவதற்கு முன்பே வெளியேற நினைக்கின்றனர். அந்த அளவுக்கு அங்கு சுகாதார வசதி, போதுமான இடவசதி இல்லை. நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.375 செலவழிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. போதுமான சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. கொரோனா பரிசோதனை குளறுபடியால் உயிர் பலிகள் மறைக்கப்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். ஆனால் முறையான சிகிச்சை இல்லை. இதுகுறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த ஆற்காடு பகுதியில் ஒருவர் சாதாரண காய்ச்சலால் இறந்தார் என டாக்டர்கள் கூறினர்.அவர் வீட்டுக்கு துக்கம் கேட்க சென்ற 4 பேருக்கு கொரோனா பரவியது. அப்படி இருக்கையில் பரிசோதனை முடிவுகளிலும் குளறுபடி உள்ளது. இதை தடுத்து பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். முடிவுகளை உடனுக்குடன் சரியாக அறிவிக்க வேண்டும் என்றார்.

கொரோனா பலி, பாதிப்பு அதிகரிக்கும்

கொரோனா நோயாளிகள் கூறியதாவது: மருத்துவமனையில் வழங்கும் சாப்பாடு சரியில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. கழிவறைகளில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த 28ம் தேதி முதல்வர் வந்து சென்றபோது மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தினர். அதன்பின் கண்டுகொள்ளவில்லை. மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் இதே நிலை நீடித்தால் கொரோனா பலி, பாதிப்பு உச்சத்தை தொடும் என்றனர்.

Tags : Tanjore Government Hospital ,tragedy ,Corona , Tanjore, Government Hospital, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...