×

நிலம் அபகரிப்புக்கு அதிகாரிகள், போலீசார் உடந்தை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நில அபகரிப்புக்கு அதிகாரிகள், போலீசார் உடந்தையாக இருந்ததாக கூறி தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க, நேற்று ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் வாணி கிராமத்தை சேர்ந்த பாத்திமா பிவீ மற்றும் அவரது மகன் அப்பாஸ்கான் வந்தனர். அப்போது திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு, பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை, அப்பாஸ்கான் உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்த போலீசார் தடுத்து நிறுத்தி, அப்பாஸ்கான் உடல் மீது தண்ணீரை ஊற்றினர். கலெக்டர் வீரராகவராவ், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த சில அடி தொலைவிலேயே இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். இதுபற்றி அப்பாஸ்கான் கூறுகையில், ‘‘வெளிநாட்டில் பணியாற்றி விடுமுறைக்கு வந்துள்ளேன். காரிக்கூட்டம் கிராமத்தில் எங்களது பூர்வீக குடும்பச்சொத்தான 14 ஏக்கர் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த ஒருவர், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் துணையோடு, தன்னுடைய பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொண்டு, நிலத்தை விற்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.

எங்களை அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் ரவுடிகளை வைத்து மிரட்டுகின்றனர். இதுபற்றி கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி

மதுரை அருகே சிலைமான் ராணிமங்கம்மாள் நகரை சேர்ந்தவர் காளியம்மாள் (70). இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் அபகரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் காளியம்மாள் கலெக்டரிடம் மனு கொடுக்க நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அலுவலக வளாக வாசலில் போலீசார் அவரை சோதனையிட்டனர்.

அப்போது, அவர் வைத்திருந்த பையில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது. இதனைத்தொடர்ந்து அவரை பிடித்த போலீசார், ‘‘எதற்காக மண்ணெண்ணெயுடன் வந்தீர்கள்’’ என விசாரித்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக மூதாட்டியை தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : collector ,office , Ramanathapuram, land grab
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...