×

ஆம்பூர் அருகே வனப்பகுதியையொட்டி விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்தில் சாணாங்குப்பம், மாச்சம்பட்டு, துருகம், ஊட்டல் உள்ளிட்ட காப்பு காடுகள் உள்ளன. இந்த காப்பு காடுகளில் அதிகளவில் மான்கள், காட்டு பன்றிகள், மலைபாம்புகள், சிறுத்தைகள் ஆகியவை வசித்து வருகின்றன. தொடர்மழை காரணமாக காடுகளில் ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகள் உருவாகி அடர்ந்த நிலையில் உள்ளதால் தற்போது இந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் நடமாட்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுக்குள் சென்ற காளையை தேடி வந்தவர்கள் அங்கு இரை தின்று கொண்டிருந்த 3 சிறுத்தைகளை கண்டு தப்பி ஓடி திரும்பினர். மாதகடப்பா தேவுடுகானாறு அருகே சென்ற ஆடுகளை அங்கிருந்த சிறுத்தை அடித்துகொன்று தின்றது.

இந்நிலையில், நேற்று மாச்சம்பட்டு அடுத்த கொத்தூர் அருகே காப்பு காட்டை ஒட்டி அமைந்துள்ள பாபு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று உறுமும் சத்தத்தை அப்பகுதியினர் கேட்டுள்ளனர். பின்னர், அங்கு சென்று பார்த்தபோது நிலத்தில் சிறுத்தையின் கால் தடம் மழை விழுந்த நிலத்தில் அச்சு அசலாக பதிந்திருந்தது. பின்னர், அந்த கால்தடத்தை பின்பற்றியதில் அது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியினர் சிறுத்தை எந்த நேரத்திலும் காட்டை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் வரக்கூடும் என்ற பீதியில் தவித்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lands ,Ambur ,forest , Ambur, leopard
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...