×

மண்டபம் கடற்கரையோரத்தில் உள்ள பழமையான நெற்களஞ்சியத்தை பாரம்பரிய சின்னமாக்க வேண்டும்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியத்தை பாதுகாத்து பாரம்பரிய சின்னமாக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சேதுபதி மன்னர்கள் காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரத்துக்கு தீர்த்த யாத்திரை வரும் யாத்ரீகர்கள், தங்கி செல்வதற்காக வழியில் பல இடங்களில் சத்திரங்களை ஏற்படுத்தினர். இங்கு தங்கும் பக்தர்களின் உணவுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட தானியங்களை சேமித்து வைக்க பல இடங்களிலும் நெற்களஞ்சியங்களை அமைத்தனர். இந்த நெற்களஞ்சியங்களை ‘இரையாயிரம் கொண்டான்’ எனவும் அழைத்து வந்துள்ளனர்.

ராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் இரையாயிரம் கொண்டான் என்ற ஒரு பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது. இதுபோல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் சிறிய அளவிலான நெற்களஞ்சியம் இருந்துள்ளது. இதுபோல் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல், அழகர்கோயில், திருப்பாலைத்துறை உள்ளிட்ட கோயில்களிலும் நெற்களஞ்சியங்கள் உள்ளன. மண்டபம், பாம்பனிலும் நெற்களஞ்சியங்கள் இருந்தது. இதில் மண்டபம் பகுதி கடற்கரையோரத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் இன்று வரை மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த நெற்களஞ்சியத்தில் உள்ள முனியசாமியை மக்கள் தற்போது வரை வழிபட்டு வருகின்றனர். இதனை ‘களஞ்சியம் முனியசாமி கோயில்’ என்றே அழைக்கின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது: தனுஷ்கோடி செல்லும் பக்தர்களுக்காக மண்டபத்தில் இரண்டு சத்திரங்கள் சேதுபதி மன்னரால் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் தனுஷ்கோடி வரை சத்திரங்கள் பல அமைந்திருந்ததால், அங்கு உணவு தயாரிக்க தேவையான தானியத்தை சேமித்து வைப்பதற்கு இங்கு நெற்களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளது. 15 அடி உயரம் 50 அடி சுற்றளவில் வெயில் மழை மற்றும் கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவில் அமைந்துள்ள நெற்களஞ்சியம் கீழே அகன்றும், மேலே குறுகியும் குதிர் போன்ற அமைப்பில் உள்ளது. இதன் சுவர் 3 அடி அகலத்தில், பாறைக்கற்கள், சுண்ணாம்பு சாந்தினால் கட்டப்பட்டுள்ளது. இதன் நடுவில் ஒரு சுவர் அமைத்து இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வடக்கு பகுதியில் 3 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளே செல்ல ஒரு வாசலும், இதே அளவில் பிரிக்கப்பட்ட சுவரிலும் ஒரு வாசல் அமைந்துள்ளது. கூம்பு வடிவிலான இதன் மேற்கூரை ஏற்கனவே இடிந்து விழுந்துவிட்டது. மழை நீர் சுவரில் படாமல் வழிந்தோடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பகுதியில் விளக்கேற்றும் மாடமும் உள்ளது. மன்னர்கள் காலத்தில் இக்களஞ்சியத்தை பாதுகாக்க பிரம்மச்சாரியான இளைஞர்கள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். அவ்வாறு காவலர்களாக இருந்த முனியசாமி, சன்னியாசி, பிச்சை, கருப்பையா, தொட்டிச்சி ஆகியோரின் சமாதிகள் இக்களஞ்சியத்தின் அருகில் உள்ளன. இவை களஞ்சியம் கோயிலாக இப்போதும் மக்களால் வழிபடப்படுகின்றன.

இதன் நினைவாக இப்பகுதி மக்களிடம் பிறக்கும் குழந்தைகளுக்கு களஞ்சியம், களஞ்சியராஜா, களஞ்சியராணி போன்ற பெயர்கள் வைக்கும் வழக்கமும் உள்ளது. சேதமடைந்து அழிந்து வரும் இதனை பாரம்பரிய சின்னமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hall ,beach , Rameswaram, granary
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...