×

கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைத்து எங்கள் மனக்கவலையை தீருங்கள் சுவாமி : நித்தியானந்தாவிற்கு 90'ஸ் கிட்ஸ்கள் கடிதம்!!

அனுப்பர்பாளையம் : கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை அவர் வெளியிட்டார்.கைலாசா குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. இதையடுத்து, மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார். அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்க கோரிக்கை விடுத்தது. மேலும் கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், அனுப்புனர் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுநர் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2000ம் ஆண்டு கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : women ,Swami ,Kailash , Kailasa, Women, Marriage, Anxiety, Nithiyananda, Letter
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்