மன்னாதி மன்னன், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர்.. நல்லாட்சியால் தமிழகத்தை உயர்த்த வந்த விவசாயி.. முதல்வர் பழனிசாமிக்கு அமைச்சர்கள் புகழாரம்!!

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் பழனிசாமி தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவலுக்கு இடையே தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியது. முதல் நாள் 16 நிமிடங்கள் மட்டுமே கூட்டம்  நடைபெற்றது. மறைந்த எம்எல்ஏக்கள் 23 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் கொரோனா, நீட், பிரதமர்  கிசான் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளதால் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் 2வது நாளான இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா பாதிப்பில் முதல்வர் மிக கவனமாக செயல்பட்டிருப்பதாக பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் ”முதல்வர் எடப்பாடியார் மன்னாதி மன்னன். இந்தியாவில் உள்ள முதல்வர்களிலேயே சிறப்பாக செயல்பட கூடிய நம்பர் 1 முதல்வர், நல்லாட்சியால் தமிழகத்தை உயர்த்த வந்த விவசாயி” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 20 ரேஷன் கடைகள் தொடங்கப்படும் எனவும் கூறினார்.அதேபோல் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது, உலகமே கொரோனாவால் முடங்கியிருந்த போதும் தமிழக அரசு சார்பில் முதல்வர் பழனிசாமி பம்பரமாக சுற்றினார் என்று புகழ்ந்து பேசினார்.மேலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார் என்றார், அமைச்சர் செங்கோட்டையன். இவரைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி பேசுகையில், ஆட்சியில் கோடை காலமே தெரியாத அளவிற்கு மழை பெய்தது என்றார்.

Related Stories:

>