×

கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றும் எம்எல்ஏக்கள் ஏன் சோகத்தில் இருக்காங்க என்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தமிழக நெடுஞ்சாலை துறையில் பத்தாண்டுகளில் 250 கோடிக்கும் மேல் கணக்கு காட்டி கரன்சியை பெட்டியில் நிரப்பி சென்றது நிஜமா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலை அமைப்பதில் நீளம், அகலத்தில் கணக்கு சரியாக இருக்கும். ஆனால் அதில்தான் பல கோல்மால்கள் நடந்து இருக்காம். மேலோட்டமாக பார்த்தால் ரோடு சூப்பராக இருப்பதாகவும் பலகைகள் புதுசாக இருப்பதாகவுமே தோன்றும். ஆனால் உள்ளே சென்று பார்த்தால் அத்தனையும் கரன்சிக்காக நடந்த கரப்ஷன் தானாம்… அதாவது, 500 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து நிதி ஒதுக்கீடு வாங்கிவிடுவார்களாம். அதில், ரூ.250 கோடி மட்டுமே செலவு நடக்குமாம். மற்றதை காகிதத்தில் கணக்க காட்டி அதிகாரிகள், இலைக்கட்சி பிரமுகர்கள் என பங்கு போட்டு கொண்டது மட்டும் ரூ.250 கோடி இருக்குமாம். இது இப்படி இருக்க, சாலை பாதுகாப்பு என்ற பெயரில் சாலையோரங்களில் தேவையற்ற இடத்தில் அலுமினிய தடுப்புகள் அமைப்பதும், அடுத்த ஆண்டே அதை அகற்றி வேறு இடத்தில் புதிதாக போட்டதாகவும், கழற்றிய இடத்தில் சுவர் கட்டியதாகவும் கணக்கு எழுதியும் கொள்ளைகள் நடந்ததாம். மேலும் சாலைகளில் பதிக்கப்படும் எச்சரிக்கை விளக்குகளுக்கு சந்தை விலையை விட பல மடங்கு விலை கொடுக்கப்படுகிறதாம். சாலையோரங்களில் வைக்கப்படும் எச்சரிக்கை பலகை அனுமதியை, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்கி, பலகை வைக்காமலேயே பழைய பலகையில் பெயின்ட் அடித்து, புதியது போல கணக்கெழுதியும் பணம் சுருட்டப்பட்டுள்ளதாம். பாதுகாப்பு அம்சங்களுக்கென இத்துறை நிர்வாகத்தில் ஆண்டுக்கு ரூ.500 கோடியை செலவிட்டதாகவும், அதற்கு எந்த வித ஆவணங்களையும் பராமரிக்காமல் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்திருப்பதாகவும் துறையின் நேர்மையான அலுவலர்கள் வேதனையோடு சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றும்… இலை கட்சியின் எம்எல்ஏக்கள் சந்தோஷமாக இல்லையாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கொங்கு மண்டல மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் போலவே இம்முறையும் பெரும்பாலான தொகுதிகளில் இலை கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை இலை ஆட்சி அமைத்த காரணத்தால், இம்மண்டல இலை எம்எல்ஏக்கள் பலரை கையில் பிடிக்க முடியவில்லை. மிக குறுகிய காலத்தில் செல்வந்தர்களாக மாறிவிட்டனர். இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சசிகலா பக்கம் போய்விடக்கூடாது என்பதால், கட்சியின் மேலிடம், இவர்களை, கரன்சியால் குளிப்பாட்டியது. பல எம்எல்ஏக்களுக்கு கரன்சி வலை போடப்பட்டது. இதன் காரணத்தால், இலை எம்எல்ஏக்கள் செல்வ செழிப்பில் வாழ்ந்தனர். இதுவரை கேட்காதது எல்லாம், கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அவர்களுக்கு கிடைத்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அடங்கி, ஒடுங்கி கிடந்த பல எம்எல்ஏக்கள் கடந்த நான்கு ஆண்டு காலம் தர்பார் நடத்தினர். ஆனால், தற்போது, கொங்கு மண்டலத்தில் வெற்றி வசப்பட்டாலும், ஆட்சி பறிபோய்விட்டது. இதன்மூலம், கரன்சி வலை அறுபட்டு போனது. இனி, வெறும் எம்எல்ஏ என்ற பதவியுடன் மட்டும்தான் உலா வர முடியும், கட்சியின் மேலிடத்தை மிரட்டி பணம் சம்பாதிக்க முடியாது என்ற விரக்தியில் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘பொன் ஆனவர் வாக்கு எண்ணிக்கையின் இடையில் வெளியே கிளம்பிவிட்டாராமே… அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தாமரை சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ஆனவர் 9வது முறையாக தேர்தலில் நின்றார். வாக்கு எண்ணிக்கை நடந்த காலத்தில் காலை 7:45 மணிக்கு அவர் கோணத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்திருந்தார். வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முதலே கதர் கட்சி வேட்பாளர் முன்னிலையை தொடங்கினார். தொடர்ந்து எல்லாச் சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில் மதியம் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமர்ந்திருந்த பொன். ராதாகிருஷ்ணன் மதியமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து மிகுந்த கவலையுடன் வெளியேறினார்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பூட்டு மாவட்டத்தில் அடமானம் வைத்த நகையை திருப்பி கொடுப்பதில் கரன்சி பார்க்கும் இலை கட்சியின் நிர்வாகி பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்டத்தின் ‘‘பட்டியில் துவங்கி பட்டி’’யில் முடியும் ஊருக்கு அருகில்தான், ‘‘பட்டி’’யில் முடியும் மற்றொரு ஊரின் கூட்டுறவு சங்கம் இருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்த நகர் நிர்வாகியான ‘‘நான்கெழுத்துக்காரர் தான், இவ்வங்கித் தலைவராகவும் இருக்கிறார். வங்கியில் 5 பவுன் வரையிலும், அடகு வைத்த நகைகளுக்கான கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்த நிலையில், இந்த நகைகளை திருப்ப வரும் விவசாயிகளுக்கு நகையைத் தராமல், ரூ.10 ஆயிரம் வரை தந்தால்தான் நகைகளைத் தர முடியும் என்று கறாராகப் பேசி, வசூல் நடத்தி வருகிறாராம். இதில் அலுவலக அதிகாரிகளுக்கும் ஒரு சிறு பங்கு போகிறதாம். வேறு வழியின்றி அத்தனை பேருமே இந்த பணத்தைக் கொடுத்தே நகையைத் திருப்பி வாங்கி செல்கிறார்களாம். இந்த வசூல் குறித்து தலைமை வரை புகார் தந்தும், நடவடிக்கை இல்லையாம். இதனால உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல பாதிக்கப்பட்ட மக்கள் முடிவு செய்துள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றும் எம்எல்ஏக்கள் ஏன் சோகத்தில் இருக்காங்க என்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Kongu Zone ,Tamil Nadu Highway ,Nizama ,Kongu ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிக அணைகளை கொண்ட...