×

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்து வருகிற ஜனவரி 27ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா!!

பெங்களூரு :சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27ல் விடுதலையாகிறார். அபராதத்தொகை ரூ.10 கோடியை கட்டாவிடில் 2022 பிப். 27ல் சசிகலா விடுதலையாவார் என்று பெங்களூரு நரசிம்மமூர்த்தி ஆர்டிஐயின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017-ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கணவர் மரணம் உள்ளிட்டவைக்காக ஓரிருமுறை பரோலில் மட்டுமே சசிகலா வெளியே வந்தார். சிறைக்குள் நடத்தை விதிகளை மீறி சசிகலா ஷாப்பிங் போனது என பெரும் சர்ச்சையானது. இன்னமும் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என தகவல் வெளியானது. 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடையும் நிலையில், சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தப் புரளிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்.

அதில், சசிகலா 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாகிறார் என்று சிறைத் துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. சசிகலா நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தியே ஆக வேண்டும். அபாரதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் அவர் 2022 ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி விடுதலையாவர்  சசிகலாவின் பரோல் காலத்தைக் கணக்கிட்டு விடுதலை தேதி மாறும். தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Sasikala , Sasikala, Liberation, AIADMK, Minister Kadampur Raju, Interview
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!