×

தெலங்கானா- சட்டீஸ்கர் எல்லையில் ஆயுதங்களுடன் ஆற்றை கடந்த 1000 மாவோயிஸ்ட்கள்: டிரோன் கேமரா பதிவில் சிக்கினர்

திருமலை: தெலங்கானா- சட்டீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நவீன ஆயுதங்களுடன் 1000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் அங்குள்ள ஆற்றை கடந்துச்சென்றனர். டிரோன் கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து இருமாநில போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க அதி நவீன தொழில்நுட்பங்களை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தெலங்கானா- சட்டீஸ்கர் மாநில எல்லையில் உள்ள சுக்மா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அதி நவீன டிரோன் கேமரா மூலம் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 1000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களுடன் அங்குள்ள ஆற்றை கடந்து தெலங்கானா மாநிலத்துக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சட்டீஸ்கர் மாநில போலீசார், தெலங்கானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலத்திற்குள் மாவோயிஸ்டுகள் நுழையாத வகையில் இரு மாநில எல்லைகளில் உள்ள சாலைகள், வனப்பகுதிகள், கிராமங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிவது போலீசாரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : Maoists ,river ,Telangana ,Chhattisgarh ,border , Telangana-Chhattisgarh border, armed, crossing the river, 1000 Maoists caught on drone camera
× RELATED தெலங்கானா- சட்டீஸ்கர் எல்லையில் மோதல்:...