நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்துக்கு கடும் கண்டனம்: காங். எதிர்ப்பு; பயப்படவில்லை என அரசு விளக்கம்

புதுடெல்லி: கொரோனா பாதித்த அசாதாரண சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பதிலளிக்க அரசு பயப்படுவது போல் ஆகாது என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவை நேற்று கூடியதும், கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எம்பிக்களிடம் விளக்கினார்.

அவர் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரில் இதுவரை 35,42,663பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 77.65 சதவீதமாகும். கொரோனா நோய் தொற்றை மத்திய அரசு உச்சபட்ச அரசியல் சவாலாக கருதுகின்றது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக 14-29 லட்சம் கொரோனா பாதிப்பு மற்றும் 37,000-38,000 உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரடங்கால் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது” என்றார். இதனிடையே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

காங்கிரசின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “கேள்வி நேரம் என்பது மக்களின் பிரச்னைகளை எழுப்புவதற்காக கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அது, அவையின் பொன்னான நேரமாகும். கேள்வி நேரத்தை ரத்து செய்வதன் மூலமாக அரசானது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயற்சிக்கின்றது. அசாதாரண சூழலில் அவை கூடும்போது கேள்வி நேரம் ஏன் ரத்துசெய்யப்படுகின்றது” என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘கேள்வி நேரம் ரத்து செய்யப்படுகிறது என்பதால் அரசு விவாதத்துக்கு பயந்து ஓடுகின்றது என அர்த்தமல்ல. எதிர்கட்சிகளால் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும்” என்றார். இதனை தொடர்ந்து 20 நிமிடம் அலுவல் நேரம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் மக்களவை இன்று மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

* ‘வீரர்களுக்கு பின்னால் நாடு இருக்கிறது’

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்திய வீரர்கள் எல்லையில் கடினமான மலை பிரதேசங்கள் மற்றும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக இந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. இந்திய எல்லைகளை பாதுகாக்கும் துணிச்சல் மிகுந்த வீரர்களின் பின்னால் இந்த நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்ற செய்தியை நாடாளுமன்றம் அளிக்கும் என்று நம்புகிறேன். வீரர்களுக்கு பின்னால் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்ற இந்த வலுவான செய்தியை ஒரே குரலில் ஒரே உணர்வுடன் நாடாளுமன்றம் வீரர்களுக்கு தெரிவிக்கும் என்று நம்புகிறேன். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.

* ஆப் மூலம் வருகை பதிவு

கூட்டத்தொடரில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டன. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக உறுப்பினர்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மக்களவையில் 200 உறுப்பினர்கள் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சுமார் 30 உறுப்பினர்களுக்கு பார்வையாளர் மாடத்தில் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மிகப்பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது. 6 பேர் அமரும் இருக்கைகளில் இடைவெளி விட்டு 3 பேர் மட்டுமே அமர்ந்து இருந்தனர். இருக்கைகளுக்கு முன்னாள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கண்ணாடி தடுப்புக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைவரும் மாஸ்க் அணிந்தபடி வந்தனர். பிரத்யேக ஆப் மூலமாக அனைத்து எம்பிக்களும் தங்கள் வருகையை மொபைல் போனிலேயே பதிவு செய்தனர்.

* இருக்கையிலே அமர்ந்து பேசுங்கள்

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறுகையில், “சில உறுப்பினர்களுக்கு பார்வையாளர் மாடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உங்களுக்கு கடினமானதாக இருக்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின்பேரில் தான் இதுபோன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பேசும்போது இருக்கையில் அமர்ந்தபடியே பேசுவதற்கு அனுமதி அளிக்கிறேன். உறுப்பினர்களுக்கு இதில் பிரச்னைகள் இருக்கலாம். பாதுகாப்போடு இருப்பது அவசியம் என்பதால் வேறு வழியில்லை” என்றார்.

* புதியவர்கள் பதவியேற்பு

மாநிலங்களவையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர் சிபு சோரன், திமுகவின் திருச்சி சிவா, பாஜவை சேர்ந்த சையத் சவார் இஸ்லாம் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். புதிய உறுப்பினர்கள் முன்னால் வந்து பதவி பிரமாணம் செய்து கொண்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் அவர்களது இருக்கைகளுக்கு திரும்பி சென்றனர். அவை தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் இதர தலைவர்களிடம் கைகுலுக்கவில்லை.

* இன்று முதலில் மாநிலங்களவை

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி, இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் 1 மணி வரை மக்களவையும், மாலை 3 மணி முதல் 7 மணி வரை மாநிலங்களவையும் நடந்தது. இன்று முதல் காலையில் மாநிலங்களவை மற்றும் பிற்பகல் மக்களவை நடைபெறும்.

Related Stories:

>