×

அண்ணா பிறந்த தினத்தையொட்டி 131 காவல் அதிகாரிகளுக்கு ‘அண்ணா பதக்கம்’: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 131 பேருக்கு  ‘முதலமைச்சரின் அண்ணா பதக்கம்’ வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் நாள் அண்ணா பிறந்த நாளன்று தமிழக  முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை  காவலர் வரையிலான 100 அதிகாரிகள், பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை  வரையிலான 10 அதிகாரிகள்,

பணியாளர்கள், சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அதிகாரிகள், பணியாளர்கள்,  ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படை வீரர் வரையிலான 5 அதிகாரிகள், பணியாளர்கள், விரல்ரேகைப் பிரிவில் 2 துணை  காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகள் முறையே உதவி இயக்குநர், அறிவியல் அலுவலர்  ஆகியோருக்கு மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத் துறை பதக்கம், திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர  மாநகராட்சி நீர்நிலைத் தொட்டி மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த எஸ்.கணேசன்(45) என்பவரை காப்பாற்றியதற்காக,  அம்மாவட்டம், பாளையம்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தைச் சார்ந்த எஸ்.வீரராஜ், நிலைய அதிகாரி மற்றும் எஸ்.செல்வம், தரம்  உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இருவருக்கும் தலா ₹5 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும்.  முதலமைச்சர் பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இப்பதக்கங்களை வழங்குவார்.இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Anna Medal ,police officers ,birthday ,Anna ,announcement ,Edappadi ,Chief Minister , 'Anna Medal' for 131 police officers on Anna's birthday: Chief Minister Edappadi's announcement
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...