×

பலத்த கட்டுப்பாடுகளுடன் 5 மாதத்துக்கு பின் பார்லி. கூட்டத்தொடர் தொடங்கியது: 30 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி

நீட் தேர்வுக்கு எதிராக திமுக எம்பிக்கள் ஆவேச பேச்சு

புதுடெல்லி: கொரோனா பாதிப்புக்கு இடையே, 5 மாத இடைவெளிக்குப் பிறகு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  நேற்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே நீட் விவகாரத்தை எழுப்பி திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார். முன்னதாக,  எம்பிக்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது  நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், 5 மாத இடைவெளிக்குப் பின், பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். நோய் தொற்று இல்லாத உறுப்பினர்கள்  மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி என கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு  நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து 18 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று காலை 9  மணிக்கு மக்களவை தொடங்கியது. அவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த மார்ச் தொடங்கி உயிர்நீத்த தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியின்போது  உயிர்நீத்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.  மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள்,  துப்புரவு தொழிலாளர்கள், போலீஸ் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழ்நாடு எம்பி வசந்தகுமார், முன்னாள் எம்பிக்கள் குர்தாஸ் சிங், நேபால் சிங், அஜித் ஜோகி, நம்கியால்,  பராஸ் நாத் யாதவ், மாதவ் ராவ் படேல், ஹரிபாபு உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை ஒரு மணி நேரம் ஒத்தி  வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போது கேள்வி நேரம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேசிய  திமுக எம்பி டி.ஆர்.பாலு நீட் விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க சி.பி.எஸ்.இ  பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். நீட் தேர்வின்  அச்சத்தினால் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 12 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தின் அனிதாவில் தொடங்கி தற்போது வரை இதுபோன்ற துயரங்கள் நடந்து வருவது வேதனையாக உள்ளது. எதிர்காலத்தில்  மருத்துவராக வேண்டியவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். இதே போன்று திமுக எம்பி திருச்சி சிவா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு  எப்படி நடத்த முடியும்? தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் கொடுத்து பயின்றவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர். ஏழை,  எளிய மக்களால் முடிவதில்லை. வெற்றி பெறும் அனைவருக்கும் மருத்துவக் கல்வியில் இடம் உண்டு என்ற உத்தரவாதமும் கிடையாது’’ என்றார்.

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக எம்.பி. பி.வில்சன், ‘‘ஒரே ஆண்டில், 12-ம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் நீட் தேர்வு என்று ஒன்றுக்கு  அடுத்து மற்றொன்றை எதிர்கொள்வது, மாணவர்களுக்கு மனரீதியான துன்புறுத்தலையும், மனச் சோர்வையும், ஏமாற்றத்தையும், விரக்தியையும்  உண்டாக்குகிறது. மாநிலங்கள் தங்களுடைய மாணவர் சேர்க்கை நடைமுறையை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்றார். மேலும்,  நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக திமுக எம்பிக்கள் நீட் எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து எம்பிக்களுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த 12, 13ம் தேதியில்  நடத்தப்பட்ட இந்த சோதனையில் சுமார் 30 எம்பிக்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் நேற்று வெளியானது.  மக்களவை எம்பிக்களில் 17 பேரும், மாநிலங்களவை எம்பிக்களில் 8 பேருக்கும் கொரோனா இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல, நாடாளுமன்ற  ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா இருப்பதும் இந்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக பாஜ எம்பிக்களில் 12 பேரும் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் 2, சிவசேனா, திமுக மற்றும் ராஷ்டிரிய லோக் தள கட்சியில் தலா ஒருவருக்கும்  தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் சுகந்தா மசூம்தர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதிபடுத்தி  உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். அதோடு அனைவரும் அவரவர் வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 30 எம்பிக்களுக்கு தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலங்களவை ஒத்திவைப்பு
இதேபோல் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மாநிலங்களவை கூடியது. அவை கூடியவுடன் அவை தலைவர் வெங்கய்ய நாயுடு இரங்கல்  தீர்மானத்தை வாசித்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்பிக்கள் பென்னி பிரசாத் வர்மா, வீரேந்திர குமார், அமர்சிங் ஆகியோரின்  மறைவுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் உறுப்பினர்கள் 15 பேரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்  தங்களது இடங்களில் அமைதியாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதனை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக  நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளின்போது, உறுப்பினர்கள் அல்லது முன்னாள் ஜனாதிபதி போன்ற தலைவர்கள் இறந்திருந்தால் அவை  ஒத்திவைக்கப்படும்.

Tags : Barley ,Session ,Corona , Barley after 5 months with heavy restrictions. Meeting series started: Corona infection confirmed for 30 MB
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!