×

மைக்ரோசாப்ட்டின் முயற்சி தோல்வி: டிக் டாக்கை வாங்கும் ஆரக்கிள்

நியூயார்க்: டிக் டாக்கை வாங்கும் மைக்ரோசாப்ட்டின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான  ஆரக்கிள் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்குத் தடை  விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஏற்கெனவே இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருந்ததால் நெருக்கடியில்  இருந்த டிக்டாக், பல லட்சம் பயனாளர்களை கொண்ட அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டதால் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. இந்நிலையில், புதிய சலுகை ஒன்றை டிக் டாக்குக்கு அறிவித்திருந்தார் டிரம்ப். ‘செப்டம்பர் 20க்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு டிக் டாக் நிறுவனத்தை  விற்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவில் நிரந்தர தடை விதிக்கப்படும்’ என்று கெடு விதித்திருந்தார்.

இந்த அறிவிப்பால் நிம்மதியடைந்த டிக் டாக்குக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் கை கொடுக்க முன்வந்தது. மிகப்பெரும் தொகையுடன் டிக் டாக்கை  வாங்குவதற்கும் தயாராக இருந்தது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பையும் இதுதொடர்பாக மைக்ரோசாப்ட்டின் சிஇஒவான சத்ய நாதெள்ளா  சந்தித்துப் பேசினார்.  ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக ‘டிக் டாக்கை ஆரக்கிள் வாங்குவதே சரியாக இருக்கும். ஆரக்கிள் நிறுவனத்துக்கு அதற்கான  நிர்வாகத் திறன் இருக்கிறது’ என்று கடந்த மாதத்தில் டிரம்ப் கூறினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக, டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்  டான்ஸ், ‘அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு டிக் டாக் விற்கப்படாது’ என்று அறிவித்துள்ளது. இதனால் போட்டியில் இருந்து மைக்ரோசாப்ட்  விலகுவதும், ஆரக்கிள் வாங்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.

திடீர் மாற்றத்தின் காரணம் என்ன?
சமீபகாலமாக கொரோனா உள்ளிட்ட பல பிரச்னைகளில், டிரம்புக்கு எதிரான கருத்துக்களை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறி வந்தார்.  இதனால்தான் ஆரக்கிள் நிறுவனத்துக்கு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆரக்கிள் நிறுவனம் டிரம்புடன் சுமூகமான  உறவைப் பராமரித்து வருகிறது. சமீபத்தில் டிரம்புக்கான தேர்தல் வேலைகளையும், நிதி திரட்டுவதிலும் ஆரக்கிள் நிறுவனம் பங்கேற்றுள்ளது.  இதுதான் ஆரக்கிளுக்கு சாதகமாகி உள்ளது.

Tags : Microsoft ,Oracle ,Tick Tock , Microsoft's attempt fails: Oracle buys Tick Tock
× RELATED நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில்...