×

மார்த்தாண்டத்தில் போலீஸ் உதவியுடன் காதலி திருமணத்தை நிறுத்திய வாலிபர்: மணப்பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் அதிரடி

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி பகுதியை சேர்ந்தவர் ஷாமிலி (23). பி.எஸ்.சி. நர்சிங் முடித்துள்ளார். இவர் தர்மபுரியில்  உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது, அங்கு ஏ.சி. மெக்கானிக்காக இருந்த ராஜூவை காதலித்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் தர்மபுரியில்  உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளார். பின்னரும் அவரவர் வீட்டிலேயே இருந்தனர். அவ்வப்போது  நேரில் சந்தித்தனர். இந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் நேரில் சந்திக்க முடியவில்லை. செல்போனில் மட்டும் பேசி வந்தனர். இதற்கிடையில்  ஷாமிலிக்கு, மார்த்தாண்டம் கிராத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து  இரு வீட்டாரும் பேசி, நேற்று (14ம்  தேதி)  திருமணம் நிச்சயித்தனர்.

இது குறித்து, ஷாமிலி தனது காதல் கணவருக்கு தெரிவித்துள்ளார். போக்குவரத்து முடங்கிய நிலையில், திருமணத்துக்கு சம்மதம் தெரிவிப்பது போல்  நடித்து விடு. கடைசி நேரத்தில் வந்து மீட்டு விடுவேன் என, ராஜூ உறுதி அளித்துள்ளார். இதையடுத்து ஷாமிலியும் அனைத்து ஏற்பாடுகளிலும்  பங்கேற்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்து ெகாண்டு இருந்தனர். இதற்கிடையே, தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக 2 வது திருமணம் செய்ய இருக்கிறார்கள் என கூறி, தர்மபுரியில் இருந்து வந்த ராஜூ,  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து  போலீசார், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு  வந்தனர். மணப்பெண்ணின் பெற்றோரை அழைத்த போலீசார், உங்கள் பெண் ஷாமிலிக்கு ஏற்கனவே திருமணம முடிந்து விட்டது.

நீங்கள் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறி, ராஜூவை திருமணம் செய்ததற்கான  போட்டோக்களை காட்டினர். இதை பார்த்ததும் ஷாமிலி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஷாமிலியும் ஒப்புக்கொண்டார். இதனால் உறவினர்கள்  ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.  ஷாமிலி, ராஜூவுடன் தான் செல்வேன் என கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் சேர்த்து அனுப்பி வைத்தனர். நேற்று நடைபெற  இருந்த திருமணமும் ரத்தானது. வழக்கமாக திரைப்படங்களில்தான் கடைசி நேரத்தில் இப்படிப்பட்ட காட்சி இருக்கும். நிஜத்தில் நடந்த இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : wedding ,reception ,Marthandam , The young man who stopped his girlfriend's wedding with the help of the police in Marthandam: Action at the bridal reception
× RELATED இப்தார் நோன்பு திறப்பு