×

வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் கொரோனாவுக்கு 2 பேர் பலி?

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர நோய்த்தொற்று  உள்ளவர்களுக்கு இங்கு வென்டிலேட்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வென்டிலேட்டர்கள் உதவியுடன் சிகிச்சை  பெற்று வரும் நோயாளிகள் வார்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் வென்டிலேட்டருக்கு வரும் ஆக்சிஜன் திடீரென அரைமணி நேரம்  நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  அப்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான  பெண்ணும், திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியைச் சேர்ந்த 47வயதுடைய செங்கல் சூளை உரிமையாளரும் ஒரே நேரத்தில் பலியாகி  உள்ளனர்.

ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் தான் 2 பேரும் பலியாகி உள்ளனர் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 43 வயதான பெண் ஒப்பந்த தூய்மை  பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 3ம் தேதி கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6 நாட்களாக அவரது உடல் நிலை  கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நேற்று மாலை திடீரென முச்சுத்திணறல்  ஏற்பட்டு மாரடைப்பால் இறந்துள்ளார்.

இதேபோல் களம்பூர் பகுதியை சேர்ந்த 47வயதுடைய ஆணும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கும்  வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மூச்சுதிணறல் காரணமாக அவரும் இறந்துள்ளார். மருத்துவக்கல்லூரிக்கு தேவையான  ஆக்சிஜன் சப்ளை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அங்கு பிளான்ட் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் திடீரென நிறுத்தப்பட்டதால் இறந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Corona ,Vellore Government Hospital , Corona kills 2 due to oxygen outage at Vellore Government Hospital?
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...