×

நீட் தேர்வு பயத்தால் உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும் செயலாகும்: அரசின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, அந்த தற்கொலைகளை அரசே  ஊக்குவிப்பது போல உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 2018ம் ஆண்டு  அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு  தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். தேர்வு பயத்தை போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும்  தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களில் நீட் தேர்வு  பயத்தால் தமிழகத்தில் மீண்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்த விவகாரம்  தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் நேற்று முறையிட்டார். அப்போது, கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்னர், கிருத்திகா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசு செயல்படுத்தாததாலேயே மாணவர்களின்  தற்கொலைகள் தொடர்ந்து வருகிறது.

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என குற்றம் சாட்டினார். மேலும், நீதிமன்ற  உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதை கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது, என அதிருப்தி தெரிவித்து,  நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அனுமதியும்  வழங்கினர்.



Tags : families ,act ,iCourt ,suicide , Compensation to families of students who die due to fear of NEET exam is an act that encourages suicide: ICC dissatisfied with government action
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...