×

காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு நீர் கலப்பு: விவசாயிகள் வேதனை

ஈரோடு: ஈரோட்டில் கோணவாய்க்கால் பகுதியில் சாயக்கழிவு நீர், சாக்கடை கழிவு நீர் ஆகியவை  நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோட்டில் உள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து சுத்தகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீரால் காலிங்கராயன், காவிரி ஆறுகள் மாசுபடிந்து வருகின்றது. மாதந்தோறும் அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் மாமூல்  கொடுத்துவிட்டு தொழிற்சாலை உரிமையாளர்கள் தாராளமாக கழிவு நீரை வெளியேற்றி நீர்நிலைகளை நாசப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு வெண்டிபாளையம் அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியில் மாநகராட்சி சாக்கடை கழிவு நீரானது நேரடியாக காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து வருவதால் தண்ணீர் மிகவும் மாசுபடிந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நள்ளிரவு மற்றும்  அதிகாலை நேரங்களில் கோணவாய்க்கால், பழைய கேஎஸ் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சாய, சலவை ஆலைகளில் இருந்து சாக்கடையில் கழிவு நீரை திறந்துவிடுவதாகவும், இந்த கழிவு நீர் நேரடியாக சாக்கடை வழியாக  காலிங்கராயன் வாய்க்காலில் கலந்து வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாசன விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது; ‘காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு நீர் கலக்காத வகையில் பேபி வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணி  பாதியில் நிற்கின்றது. இதனால் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  இருந்து தொழிற்சாலைகளின் கழிவு நீர் நேரடியாக வாய்க்காலில் கலந்து தண்ணீர் மாசுபடிந்து வருகின்றது.

கோணவாய்க்கால் பகுதியில் செயல்படும் சாய, சலவை ஆலைகளில் இருந்து தினமும் அதிகாலை நேரத்தில் சாக்கடையில் திறக்கப்படும் கழிவு நீரானது காலிங்கராயன் வாய்க்காலில் பாசன நீருடன் கலந்து வருவதால் தண்ணீர் மிகவும் மாசுபடிந்து வருகின்றது. இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதே நிலை நீடித்தால் மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் நிலை ஏற்படும்’.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags : canal ,Kalingarayan , Kalingarayan canal, leachate, water mix
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்