×

செம்மரக் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: செம்மரக் கட்டை கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? என்று தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்மரக் கட்டைகள் கடத்தியதாக மகபூப் பாஷா என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செம்மரக் கட்டைகள் கடத்தியாக கூறி மகபூப் பாஷா என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு, மகபூப் பாஷாவின் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. அது மட்டுமில்லாமல் செம்மரக் கட்டைகள் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழக அரசுக்கு நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள், ஆந்திராவில் உள்ள செம்மரக்கட்டைகள் கடத்தியதாகவும் கைது செய்யப்படுவதாகவும் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சரியான வேலைவாய்ப்புகள் இல்லாததால் தொழிலாளர்களை அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே உரிய வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்த உயர்நீதிமன்றமானது, தமிழக டிஜிபியை ஓர் எதிர்மனுதாரராக சேர்த்து இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தமிழக டிஜிபி 2 வாரத்தில்  சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மரக் கட்டை கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? யார் யார் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? பதியப்பட்டுள்ள வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் அரசியல்வாதிகள் பெயர் இடம்பெற்றுள்ளதா?  செம்மரக் கட்டை கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாற்று வேலைவாய்ப்புக்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? மேலும் இந்த செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் தமிழக -ஆந்திர போலீசாரும் இணைந்து ஏதேனும் கூட்டு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தமிழக டிஜிபி 2 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : DGP ,Tamil Nadu , Red sandalwood abduction, Tamil Nadu DGP, High Court, order
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...