×

அரசு பள்ளிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறந்தாங்கியை அடுத்த நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவநல்லூர், மைவயல், களக்குடி, ஆலடிக்காடு, வேதியன்குடி, வேட்டனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் சைக்கிள்களிலும், நடந்தும் வந்து செல்கின்றனர். மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடை திறக்க சிலர் முயற்சி மேற்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் மதுபானக்கடை அமைக்கவில்லை. தற்போது அங்கு டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் மதுபானக் கடை திறந்தால் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் குறிப்பாக மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். மக்கள் நலனில் அக்கறை காட்டும் மாவட்ட கலெக்டரும், அறந்தாங்கி உதவி கலெக்டரும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளி மாணவ, மாணவியர் செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க அனுமதிக் கூடாது என்பதே பொதுக்கள், மாணவ, மாணவியரின் பெற்றோரின் கோரிக்கையாகும்.

இது குறித்து நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அரியமரக்காடு குணசேகரன் கூறியது: பல்வேறு கிராமங்களின் மையமாக விளங்கும் நாகுடியில் கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபானக் கடை இல்லாததால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. இந்நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். மாணவர்கள் வரும் வழியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : protest ,opening ,store ,government school ,Tasmac , Government School, Tasmac
× RELATED சின்ன இலந்தைகுளத்தில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு