×

கொலை வழக்கில் தொடர்புடைய மல்யுத்த வீரருக்கு தூக்கு நிறைவேற்றம்: ஈரானின் நடவடிக்கைக்கு ஒலிம்பிக் சங்கம் வருத்தம்

தெஹ்ரான்: கொலை வழக்கில் தொடர்புடைய மல்யுத்த வீரருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. தேசிய சாம்பியன் பட்டம் வென்ற ஈரான் நாட்டின் மல்யுத்த வீரர் நவித் அப்ஹரி (27). இவர், 2018ல் ஈரானில் நடந்த போராட்டத்தின்போது அரசு அலுவலக பாதுகாவலர் ஹசின் தோர்க்மென் என்பவரை குத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மேலும், அவரது சகோதரர் வஹித் மற்றும் ஹபிப் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஷரிஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை பெற்று வந்தது.

விசாரணையில் நவித் அப்ஹரி முக்கிய குற்றவாளி என்றும் மற்றும் அவரது சகோதரர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நவித் அப்ஹரிக்கு தூக்கு தண்டனையும், அவரது சகோதரர்களில் வஹித்திற்கு 54 ஆண்டுகளும், ஹபிபிற்கு 27 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், மல்யுத்த வீரர் நவித் அப்ஹரிக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை எனவும், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் ஈரான் அரசிடம் வேண்டுகோள் விடுத்தன.

ஆனால், அனைத்து நாடுகளின் கோரிக்கை, உலக மல்யுத்த விளையாட்டு அமைப்பு கோரிக்கை என அனைத்தையும் ஈரான் நிராகரித்தது. இதற்கிடையே, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மல்யுத்த வீரர் நவித் அப்ஹரிக்கு, ஈரான் நேற்றிரவு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது. நவித் அப்ஹரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags : wrestler ,Olympic Association ,Iran , Murder, wrestler, execution, execution, Iran, Olympic Association, grief
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...