×

குஞ்சிபாளையம் கிராமத்தில் 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன்கடை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சிபாளையம் கிராமத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஐந்து முக்கு சந்திப்பு பகுதியில், வாடகை கட்டிடத்தின்கீழ் ரேஷன் கடை இயங்கி வந்தது. இங்கு சுமார் 800 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொது வினியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, அக்கிராமத்திலிருந்து சீனிவாசபுரம் செல்லும் வழியின் ஒருபகுதியில், கடந்த 2013ம் ஆண்டு எம்பி நிதியில் ரூ.6.35 லட்சத்தில் புதிய ரேஷன் கடை அமைக்கும் பணி துவங்கப்பட்டு, சில மாதங்களிலேயே கட்டுமான பணி நிறைவடைந்தது. ஆனால், பொதுமக்கள் வசதிக்காக குஞ்சிபாளையம் கிராமத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை சுமார் 8 ஆண்டுகள் கடந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த ரேஷன்கடை வெளியாட்கள் தங்கி செல்லும் இடமாகவும், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், குஞ்சிபாளையம் கிராமத்தில், ரேஷன்கடைக்கு என சொந்த கட்டிடம், பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது. ஆனால், அதனை திறந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தற்போது, கேட்பாரற்று கிடக்கும் இந்த ரேஷன் கடை செயல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால், இரவு நேரத்தில் சமூகவிரோத செயல்கள் நடக்கிறது. சில நேரத்தில் சமூக விரோதிகள், அங்கேயே மது அருந்தி விட்டு மது பாட்டில்களை போட்டு செல்கின்றனர். எனவே, வரும் காலங்களில் மக்கள் சிரமமின்றி ரேஷன் பொருட்களை வாங்கி செல்வதற்கான வசதி ஏற்படுத்த புதிய ரேஷன் கடையை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : village ,Kunchipalayam , Kunchipalayam, Ration Shop
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...