×

கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்ட கூட்டு மின் உற்பத்தி திட்டம்

சின்னசேலம்: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1998ல் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மூக்கப்பன் உள்ளிட்ட பலரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி முதன் முதலாக கரும்பு அரவையை துவக்கி வைத்தார். அதன்பிறகு விவசாயிகள் நலன்கருதி கடந்த 2012-2013ல் சிறப்பு கரும்பு அரவைப்பருவமும் துவங்கப்பட்டது. மேலும் இந்த ஆலையில் 25 கரும்பு அரவை பருவங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலை இயங்குவதற்கான மின்சாரத்தை ஒப்பந்த அடிப்படையில் காகித ஆலை நிறுவனம் நிலக்கரியை எரித்து நீராவி மின்சாரத்தை வழங்குகிறது. அதற்கு பதிலாக சர்க்கரை ஆலை நிறுவனம் காகிதம் தயாரிக்க தேவையான கரும்பு சக்கையை தருகிறது. இந்த ஆலையில் முதன்மை உற்பத்தியான சர்க்கரையுடன், கரும்பு சக்கை, கழிவுப்பாகு, கழிவு மண் போன்றவை கூடுதல் உற்பத்தி பொருளாக கிடைக்கிறது. இதனால் இந்த சர்க்கரை ஆலை பொதுவாக லாபகரமாகவே இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2010ல் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு சுமார் ரூ.100 கோடி மதிப்பில் கூட்டு மின்உற்பத்தி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் கரும்பு அரவை காலங்களில் தினசரி ஒருமணி நேரத்தில் 14,600 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் ஆலை இயக்கத்திற்கு 4,300 யூனிட் மின்சாரம் போக, மீதி உள்ள 10,300 யூனிட் மின்சாரம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்கப்படும்.

அதைப்போல கரும்பு அரவை இல்லாத காலங்களில் 15,000 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஆலையின் தேவைக்கு 1,000 யூனிட் மின்சாரம் போக, மீதி உள்ள 14,000 யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்கவும் திட்டமிட்டு, கோமுகி சர்க்கரை ஆலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது கரும்பு அரவை காலத்தில் கரும்பு சக்கையில் இருந்தும், கரும்பு அரவை இல்லாத காலத்தில் நிலக்கரியில் இருந்தும் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் செயல்முறைக்கு வந்தால் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.500 கோடி வரை ஆலைக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சுற்றுப்புற கிராமங்களின் மின் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.

தற்போது கூட்டு மின் உற்பத்தி திட்ட பணிகளான ஆலையில் பாய்லர் பணி, ஆலையில் இருந்து சடையம்பட்டு துணைமின்நிலையம் வரை மின்சாரம் கொண்டு செல்ல கோபுரங்கள் அமைக்கும் பணி ஆகியவை சுமார் 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. கன்வேயர் அமைத்தல், பாய்லர் அமைத்தல் டர்பன், கூலிங் டவர், இயந்திரங்களை பொருத்துதல் உள்ளிட்ட மற்ற பணிகள் 30 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. இதனால் கூட்டுமின் உற்பத்தி திட்ட பணிகளுக்காக பல கோடி மதிப்பில் வாங்கப்பட்ட இயந்திரங்கள் திறந்த வெளியிலேயே போடப்பட்டதால், வெயிலிலும், மழையிலும் நனைந்து துருபிடித்த நிலையில் உள்ளது.

இதுகுறித்து கடந்த 2018ல் தினகரன் நாளிதழில் வந்த செய்தியை அடுத்து தொழில்துறை அமைச்சர் சம்பத் உயர் அதிகாரிகளுடன் ஆலையை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மேலும் வரும் 2019க்குள்ளேயே இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறினார். அமைச்சர் சம்பத் கூறி ஓராண்டாகியும் இன்னும் கிடப்பிலேயே உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கூட்டுமின் உற்பத்தி திட்ட வளாகம் முழுவதும் முட்செடிகள், புற்கள் முளைத்து அடர்ந்த காடுபோல காணப்படுகிறது. பல தளவாட பொருட்கள் மண்ணிலேயே கிடக்கிறது.

ஆகையால் வரும் சட்ட மன்ற கூட்டத் தொடரிலாவது எம்எல்ஏக்கள் பொன்முடி, உதயசூரியன், கார்த்திகேயன் ஆகியோர் ரூ.100 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்திட நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரில் அரசை வலியுறுத்தி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துபேச வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களுக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைத்திட ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட அமைச்சர் சண்முகம், தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோரும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kachirayapalayam Gomuki Cooperative Sugar Mill , Power Generation, Kachirayapalayam Gomuki Cooperative Sugar Mill
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை