×

நீட் தேர்வு எதிர்கால மருத்துவர்களை சாகடிக்கிறது : நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆவேசம்

புதுடெல்லி: எதிர்காலத்தில் மருத்துவர்களாக உருவாக இருக்கும் மாணவர்களை நீட் தேர்வு சாகடிக்கிறது, அதனால் அதனை ரத்து செய்ய வேண்டும் என திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் ஆவேசமாக வலியுறுத்தி பேசினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை சுமார் 18 நாட்கள் நடக்கிறது. இதில் முதல் நாளான இன்று நாடாளுமன்ற கூட்டத்தின் போது எம்பியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் தேர்வு என்பது முழுக்க முழுக்க சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் அனைத்தும் கேட்கப்படுகிறது. இதனால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.

நீட் தேர்வின் அச்சத்தினால் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 12 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் அரியலூர் மாவட்டத்தின் அனிதாவில் தொடங்கி தற்போது வரை இதுபோன்ற துயரங்கள் நடந்து வருவது வேதனையாக உள்ளது. இதில் வரும்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அவையில் குறிப்பிட்டு பேசினார்.
 
 இதேப்போன்று திமுக எம்பி திருச்சி சிவா நிருபர்களிடம் கூறும்போது, சுமார் 12 ஆண்டுகளாக கற்றக் கல்வி அறிவை தூர எரிந்து விட்டு வெறும் 3 மணி நேரம் மட்டும் தேர்வு என்ற முறையில் சோதித்து மருத்துவக் கல்விக்கு மாணவர்களை தேர்வு செய்வது ஏற்கக்கூடியது இல்லை. மேலும் பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? .தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் கொடுத்து பயின்றவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களால் முடிவதில்லை, என்றார்.

Tags : Palu ,doctors ,DMK ,Parliament , NEET EXAMINATION, DOCTORS, PARLIAMENT, DM, MP DR BALU, OVER
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்