×

பூம்புகாரில் 108 ஆம்புலன்ஸ் சேவை திடீர் நிறுத்தம்

சீர்காழி: பூம்புகாரில் 108 ஆம்புலன்ஸ் சேவை திடீரென்று நிறுத்தப்பட்டதால், 30 கிராம மக்கள் அவதிப்படுகிறன்றனர். எனவே மீண்டும் 108 ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே பூம்புகார் மேலையூரில் பொதுமக்கள் நலன் கருதி 108 ஆம்புலன்ஸ் வாகனம் செயல்பட்டு வந்தது. இந்த வாகனம் மூலம் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். மேலையூரில் 108 வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மேலப்பெரும்பள்ளம், பூம்புகார், திருவெண்காடு, காத்திருப்பு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் விரைவாக சிகிச்சைக்காக சென்று வந்தனர். இதேபோல் பூம்புகார் சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலும், மீனவர்கள் விபத்தில் சிக்கினாலும் 108 வாகனம் விரைவாக சென்று பாதிக்கப்பட்ட நபர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மேலையூரிலிருந்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன் கூறுகையில், பூம்புகாரில் சுற்றுலா மையம் செயல்பட்டு வருவதாலும் பூம்புகாரில் துறைமுகம் அமைந்துள்ளதாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் 108 சேவை மேலையூரில் இருந்து செயல்பட்டு வந்தது. இதனால் விபத்துகளில் சிக்கியவர்களை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவாக சென்று பிரசவம் பார்த்து வந்தனர். மேலையூரில் 108 வாகனம் செயல்பட்டு வந்ததால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். தற்போது 108 வாகனம் மேலையூரிலிருந்து திடீரென வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 108 வாகனத்தை அழைத்தால் மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் கடந்து வாகனங்கள் வரவேண்டும். இதனால் விபத்துக்களில் சிக்கியவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக விலைமதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடும். பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும் மேலையூரில் 108 ஆம்புலன்ஸ் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : stop ,Poompuhar , Poompuhar, Ambulance
× RELATED ஒன்றியத்தில் புதிய அரசு பதவி ஏற்றதும்...