×

பாளை சக்திநகரில் பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கும் மாநகராட்சி பூங்கா

கேடிசி நகர்: ஊரடங்கு தளர்வை அடுத்து பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாளை சக்திநகர் மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் அவதிப்படும் அப்பகுதி மக்கள் விரைவில் சீரமைக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர். நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. மாநகரில் பொழுபோக்கிற்கு மாவட்ட அறிவியல் மையம் தவிர குறிப்பிட்ட அம்சங்கள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பூங்காக்களில் மாலை நேரங்களில் குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிப்பது வழக்கம். இருப்பினும் கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் செல்ல முடியாத நிலையில் பூங்காக்களில் பராமரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பெரும்பாலான ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட உபகரணங்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து பாழாகின.

அந்தவகையில் பாளை சக்தி நகரில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பூங்காவும் பராமரிப்பின்றி ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்தும் புதர் மண்டியும் பாழாகி கிடக்கிறது. இவை தவிர பூங்காவில் உள்ள மான், சிங்கம், ஒட்டகம் உள்ளிட்ட விலங்கு சிலைகளும் உடைந்து சேதமடைந்துள்ளன. மேலும் இங்குள்ள நடைபாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இது பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகளின் புகலிடமாக உள்ளது. இங்குள்ள கழிப்பறைகளும் கதவுகளின்றி திறந்துக் கிடக்கின்றன. ஊரடங்கு தளர்வால் கடந்த 1ம்தேதி முதல் பொதுமக்கள் பூங்காக்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை நேரங்களில் பூங்காவிற்கு குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிக்கின்றனர். இத்தகைய நிலையில் இப்பூங்கா புதர் மண்டிக்கிடப்பதால் அவதிப்படும் இப்பகுதி மக்கள், விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மணப்படை மணி என்பவர் கூறுகையில், ‘‘இங்குள்ள பூங்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். பூங்காவில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்துவதோடு சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க வேண்டும். தற்போது பூங்காவிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றார்.

Tags : Shrubbery Corporation Park ,Pali Sakthinagar , Corporation Park, LockDown
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...