நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தகவல்..!!

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவும் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தனது டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு அடுத்தப்படியாக தமைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ரூ.50 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது தொடர்பாக ஜூலை 22ம் தேதி மீண்டும் ஒரு டிவிட்டர் பதிவை செய்தார்.

அதில்,”கொரோனா பாதுகாப்பு நடைமுறை விதிகளை மீறி அவர் முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செயல்பட்டுள்ளார். இது ஏற்க கூடிய ஒன்று கிடையாது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளையும் அவர் சரிவர கையாளவில்லை’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த செயல்பாடுகள் அனைத்தும் நீதித் துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என கடந்த மாதம் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, கிருஷ்ணா முராரி மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வு ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் நீதிமன்ற மற்றும் நீதிபதிகளை அவமதித்த விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் நீதிமன்றம் அபராதத் தொகையாக வழங்குகிறது. இதனை அவர் வரும் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், மூன்று வருடம் எந்தஒரு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்பாக ஆஜராகக் கூடாது என தடை விதிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் விதித்த ஒரு ரூபாய் அபராதத்தை இன்று செலுத்துகிறேன் என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனுவும் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>